Last Updated : 13 Apr, 2021 03:12 AM

4  

Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

26 குர்ஆன் வசனத்தை நீக்க கோரிய மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதம் விதிப்பு

புதுடெல்லி

உச்ச நீதிமன்றத்தில் ஷியா வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீயின் குர்ஆன் மீதான மனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இது ஒரு அற்பமான செயல் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள் அதற்காக ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தனர்.

உத்தரபிரதேச ஷியா பிரிவு முஸ்லிம்களின் சர்ச்சைக்குரியத் தலைவராகக் கருதப்படுபவர் வசீம் ரிஜ்வீ. இவர் கடந்த மாதம், முஸ்லிம்களின் புனிதக் குர்ஆனின் 26 வசனங்களை நீக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்தார். இவை முஸ்லிம்கள் இடையே தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் அதில் தெரிவித்திருந்தார்.

இந்த வசனங்கள் மூலம் குர்ஆனை நம்பாதவர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் நியாயப் படுத்தப்படுவதாகவும் அதில் காரணமாகக் குறிப்பிட்டிருந்தார்.

ரிஜ்வீ மீது புகார்

இதனால், ரிஜ்வீ புனிதக் குர்ஆனையும், இறைத்தூதரான முகம்மது நபியையும், அவமதித்து விட்டதாக ஷியா மற்றும் சன்னி ஆகிய இரண்டு பிரிவு முஸ்லிம்கள் இடையிலும் புகார் எழுந்துள்ளது. இவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், இதற்காக ரிஜ்வீயை கைது செய்து அவரை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரபிரதேச முஸ்லிம்கள் போராட்டம் நடத்தினர்.

ஆக்ரா, பரேலி உள்ளிட்ட சில மாவட்டங்களின் காவல்நிலையங்களிலும் ரிஜ்வீ மீது சில முஸ்லிம் அமைப்புகள் வழக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்றத்தில் வசீம் ரிஜ்வீயின் மனுவை நீதிபதி ஆர்.எப்.நரிமன் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்தது.

மனுவுக்கு கண்டனம்

இந்த மீதான விசாரணையின் போது, ‘‘இம்மனுவை விசாரிப்பதில் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்களா?’’ என்று அமர்வின் தலைமை நீதிபதியான நரிமன், மனுதாரரின் வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஆம் என்்று அவர் பதில் அளித்ததை அடுத்து, ‘‘இந்த மனு ஒரு அற்பமான செயலுக்கானது. அதற்காக, வசீம் ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கிறோம்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.அயோத்தி வழக்கிலும் வசீம் ரிஜ்வீ, துவக்கம் முதலாக ராமர் கோயிலுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தார். சன்னி பிரிவு முஸ்லிம்களின் மற்ற விவகாரங்களிலும் ரிஜ்வீ கூறிய கருத்துக்கள் கண்டனத்திற்கு உள்ளாகின.

டெல்லியின் வரலாற்று சின்ன மான ஹுமாயூன் சமாதியை இடித்து முஸ்லிம்களின் இடு காடாக மாற்ற வேண்டும் எனவும், நாட்டின் மதரஸாக்களில் தீவிரவாதம் வளர்வதாகவும் ரிஜ்வீ கூறி இருந்தார். இப்பட்டியலின் உச்சமாக அவர் கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடுத்தமைக்காக வசீம் ரிஜ்வீயை கண்டித்து தேசிய சிறுபான்மை நல ஆணையமும் நோட்டீஸ் அளித்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x