Published : 12 Apr 2021 04:15 PM
Last Updated : 12 Apr 2021 04:15 PM

கரோனாவுக்கு 3-வது தடுப்பூசி; ரஷ்யாவின் ஸ்புட்னிக்: அவசரகால பயன்பாட்டிற்கு இந்தியாவில் அனுமதி

புதுடெல்லி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ‘கோவிஷீல்டு’ மற்றும் ‘கோவேக்ஸின்’ ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா ஆகியவற்றின் கூட்டுடன் இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கோவாக்ஸின்’ தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1ம் தேதி முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில் 10.45 கோடிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இந்தியாவில் 3-வது கரோனா தடுப்பூசியாக ஸ்புட்னிக் வி பயன்பாட்டுக்கு வரும்.

உலகிலேயே முதல்முறையாக பதிவுசெய்யப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி ஸ்புட்னிக் வி தடுப்பூசிதான். ஆனாலும், தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் சந்தேகம் தெரிவித்து வந்தனர். அதன்பின்னர், ஸ்புட்னிக் தடுப்பூசி கரோனாவில் இருந்து மக்களை காப்பதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாக ரஷ்யா தெரிவித்தது. அதன்பிறகு, ஸ்புட்னிக் கரோனா தடுப்பு மருந்து 2, 3ஆம் கட்ட மனித சோதனைகளுக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு 10 கோடி எண்ணிக்கையில் சப்ளை செய்ய ஒப்பந்தம் செய்தது. அதன்படி டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்கு நிபுணர்குழு அனுமதி வழங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x