Published : 12 Apr 2021 12:14 PM
Last Updated : 12 Apr 2021 12:14 PM

பேச்சுவார்த்தைக்கு தயார்; கோரிக்கையில் சமரசம் இல்லை: விவசாய சங்கத் தலைவர் அறிவிப்பு

புதுடெல்லி

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி இருந்தநிலையில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நேற்று தனது ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு எப்போதும் தயாராக இருக்கிறது. தற்போது கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் இந்த விவகாரத்துக்கு தீர்வு காண விவசாயிகள் முயற்சிக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளதாக விவசாய சங்க தலைவர் ராகேஷ் டிகைத் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அரசு அழைத்தால் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் தயாராகவே உள்ளனர். கடந்த ஜனவரி 22-ம் தேதி எங்குப் பேச்சுவார்த்தையை விட்டோமோ அதே இடத்திலிருந்து மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராகவுள்ளோம்.

ஆனால் மத்திய அரசு மூன்று விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு உடனடியாக இயற்ற வேண்டும். எங்கள் கோரிக்கைகளில் எவ்வித சமரசத்தையும் செய்து கொள்ள நாங்கள் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x