Published : 12 Apr 2021 09:24 AM
Last Updated : 12 Apr 2021 09:24 AM

ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை: இந்தியாவில் கரோனா பரவல் அதிகரிப்பால் தேவை உயர்வு

புதுடெல்லி

இந்தியாவில் ரெம்டெசிவர் மருந்தின் தேவை அதிகரித்துள்ளதால் கோவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை அதன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கோவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசியின் தேவையை திடீரென அதிகமாக்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

அமெரிக்காவின் ஜிலீட் சயீன்சஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, ரெம்டெசிவர் ஊசியை, 7 இந்திய நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த நிறுவனங்கள், மாதம் 38.80 லட்சம் மருந்துகள் தயாரிக்கும் திறன் வாய்ந்தவை.

தற்போதை கோவிட் அதிகரிப்பு சூழலை கருத்தில் கொண்டு, இந்தியாவில் கோவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் ஆக்டிவ் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மேலும், ரெம்டெசிவர் ஊசிகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு எளிதில் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்த மருந்து எளிதில் கிடைக்கும் வகையில், உள்நாட்டில் ரெம்டெசிவர் ஊசி மருந்து தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், ரெம்டெசிவர் இருப்பு நிலவரம், விநியோகிஸ்தர்கள் விவரங்களை தங்கள் இணையதளத்தில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்த இருப்பு விவரங்களை மருந்து ஆய்வாளர்கள் மற்றும் இதர அதிகாரிகள் சரிபார்த்து, முறைகேடுகள் நடந்ததால் மற்றும் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது. மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் இது குறித்து, அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மருந்து ஆய்வாளர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

ரெம்டெசிவர் மருந்து உற்பத்தியை அதிகரிக்கும்படி உள்நாட்டு நிறுவனங்களுக்கு மருந்தியல் துறை கூறியுள்ளது.

கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க, கோவிட்-19 தேசிய மருந்துவ மேலாண்மை நெறிமுறைகளை பின்பற்றும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அந்த நெறிமுறையில், ரெம்டெசிவர் , ஆய்வில் உள்ள மருந்து என பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மருந்து தொடர்பான முடிவுகளை பகிர்ந்து கொள்வது அவசியம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் தெரிவித்து நிலைமையை கண்காணிக்கும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x