Published : 11 Apr 2021 09:01 AM
Last Updated : 11 Apr 2021 09:01 AM
மேற்குவங்கத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று 6 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். மாநிலத்தில் நேற்று கலவரம் ஏற்பட்டு துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில், இன்று அவர் அடுத்தக்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் 4-ம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில், 76.14 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், வரும் ஏப்ரல் 17ம் தேதி, 45 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 5ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 22ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு, ஏப்ரல் 26ல் 7 மற்றும் ஏப்ரல் 29ல் 8ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில், அமித் ஷா இன்று மாநிலம் முழுவதும் 6 இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். சாந்திப்பூரில் பகல் 12.20 மணிக்கு சாலை வழியாக பேரணி மேற்கொள்கிறார். பின்னர் 1.30 மணிக்கு ரானாகட் தக்சின் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார். மதியம் 3.40 மணிக்கு பசிராத் தக்ஷின் பகுதியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 4.52 மணிக்கு பனிஹாட்டி பகுதியிலும் 5.30 மணிக்கு கமார்ஹாட்டி டவுன் ஹாலிலும், இரவு 7 மணிக்கு கோபால்பூரிலும் பிரச்சாரம் செய்கிறார்.
முன்னதாக நேற்று கூச்பெஹார் மாவட்டம், சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியாகினர்.
சம்பவம் நடந்த இடத்துக்கு இன்று செல்லவிருப்பதாக மம்தா பானர்ஜி அறிவித்திருந்தார். ஆனால், அரசியல்வாதிகள் அப்பகுதிக்குச் செல்ல அனுமதியில்லை என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT