Last Updated : 10 Apr, 2021 05:14 PM

16  

Published : 10 Apr 2021 05:14 PM
Last Updated : 10 Apr 2021 05:14 PM

கரோனா சூழலையும் தவறாகக் கையாண்டது; தடுப்பூசியிலும் பற்றாக்குறை உருவாகியுள்ளது: மத்திய அரசு மீது சோனியா காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

''நாட்டில் கரோனா வைரஸ் சூழலையும் மத்திய அரசால் கவனமாகக் கையாள முடியவில்லை. தடுப்பூசியைக் கண்டுபிடித்து அதை மக்களுக்குப் போதுமான அளவு கிடைக்காமல் பற்றாக்குறை ஏற்பட வைத்துள்ளார்கள்'' என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.45 லட்சம் பேர் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, நாட்டில் கரோனா வைரஸ் பரவல், தொற்றைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள், காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டிய பணிகள் ஆகியவை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறியதாவது:

''காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டறிந்தார். நாட்டில் கரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் எழுப்பி, மக்கள் நலனுக்காகச் செயல்படுங்கள் என்று அழுத்தம் கொடுப்பது முதன்மையான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு என சோனியா தெரிவித்தார்.

முதலில் நாம் நம் நாட்டு மக்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகளைச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வேகப்படுத்த வேண்டும். அதன்பின்புதான் ஏற்றுமதி குறித்தும், மற்ற நாடுகளுக்குத் தடுப்பூசியைப் பரிசளிப்பது குறித்தும் பேச வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தினார்.

பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள், கரோனா விதிகளை எந்தவிதமான விதிவிலக்குகள் இல்லாமல் கடைப்பிடியுங்கள் என்று மத்திய அரசுக்குத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி வலியுறுத்தும் என்று அவர் தெரிவித்தார்.

மாநிலங்களுடன் இணைந்து, கூட்டாட்சித் தத்துவத்துக்கு மதிப்பளித்து மத்திய அரசு செயல்பட வேண்டும். மாநிலங்கள் நலனிலும் அக்கறையுடன் செயல்பட்டு, கரோனாவுக்கு எதிரான போரை மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும். நாம் அனைவரும் சேர்ந்துதான் கரோனாவுக்கு எதிராகப் போராட முடியும்.

காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும், பரிசோதனைகளின் அளவை அதிகப்படுத்த வேண்டும், போதுமான அளவு மருத்துவ வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என சோனியா காந்தி அறிவுறுத்தினார்.

மாநிலங்களுக்குப் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இருக்கிறது, மத்திய அரசு கூட்டுறவுடன் நடக்கிறதா, ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட வசதிகள் இருக்கிறதா, மற்றொரு லாக்டவுன் குறித்த உங்கள் கருத்து, பொருளாதாரம் வீழ்ச்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள், உங்கள் மாநிலத்தில் பொருளாதார நிலை, மக்கள் ஒன்றாகக் கூடுவது, தேர்தல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டுமா போன்ற கேள்விகளை சோனியா காந்தி கேட்டு, கருத்துகளைக் அறிந்தார்.

மத்திய அரசு கரோனா வைரஸ் பரவலையும் சரியாகக் கையாளாமல் கட்டுப்படுத்தவில்லை, தற்போது தடுப்பூசியையும் பற்றாக்குறை இல்லாமல் கொண்டு செல்ல முடியவில்லை என சோனியா காந்தி குற்றம் சாட்டினார். கரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் கூடும் அனைத்துவிதமான திருவிழாக்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்''.

இவ்வாறு சுர்ஜேவாலா தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், காங்கிஸ் எம்.பி. ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் ஆகியோர் பங்கேற்றனர்.

ராகுல் காந்தி பேசுகையில், “கரோனா காலத்தில் ஏழைகள் மிகவும் வறுமையில் வாடியதால் இந்த முறை மக்களின் கைகளில் நேரடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். நோய்த்தொற்று, சத்துணவு, வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆதலால், ஏழைகளுக்கு நேரடி உதவித்தொகை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x