Published : 10 Apr 2021 01:42 PM
Last Updated : 10 Apr 2021 01:42 PM
மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கும் 4-வது கட்டத் தேர்தல் இன்று நடந்து வரும் நிலையில், உள்ளூர் மக்களின் தாக்குதலில் இருந்து காத்துக்கொள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு வங்க மாநிலம், கூச் பெஹர் மாவட்டம், சித்லாகுச்சி பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் ஏற்கெனவே 3 கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், 4-வது கட்டமாக இன்று 44 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறுகிறது. இன்று காலை முதல் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து வந்தது.
ஆனால், கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள சித்லாகுச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் காலை முதல் வன்முறைச் சம்பவங்கள் நடந்தவாறு இருந்தன. சித்லாகுச்சி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் முதல் முறையாக வாக்களிக்க வந்திருந்த இளைஞரை அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பினார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்தார்.
இதற்கிடையே சித்லாகுச்சியில் உள்ள மாதாபங்கா பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இன்று காலை நடந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென பாஜகவினருக்கும், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலைக் கலைக்கும் வேலையில் போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மக்களில் ஒரு தரப்பினர் மத்தியப் படையினர் வைத்திருந்த துப்பாக்கிகளைப் பிடுங்கவும், அவர்களைத் தாக்கவும் முயன்றனர்.
இதனால், வேறு வழியின்றி தற்காப்புக்காக மத்தியப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து மத்தியப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “உள்ளூர்வாசிகள் சிஐஎஸ்எப் படையினர் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். அவர்களின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்றனர். இதனால், தற்காப்புக்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர். சிஐஎஸ்எப் வீரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் முடிவு எடுக்க வேண்டும். முதல்கட்டத் தகவலின்படி தற்காப்புக்காகவே துப்பாக்கியைப் பயன்படுத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 4 பேரின் உடலும் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 4 பேரும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT