Published : 10 Apr 2021 11:48 AM
Last Updated : 10 Apr 2021 11:48 AM
அரசியல் கட்சிகளின் நட்சத்திரப் பேச்சாளர்கள், தலைவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். கரோனா விதிகளை முறையாகக் கடைப்பிடிக்காவிட்டால், தேர்தல் கூட்டம் நடத்தவும், பிரச்சாரம் செய்யவும் தடை விதிக்கத் தயங்கமாட்டோம் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி தேர்தல் பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால், பெரும்பாலான அரசியல் கட்சிகளின் பேச்சாளர்களும், தலைவர்களும் இந்த விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் நேற்று கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''நாட்டில் கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் காண்கிறோம். தேர்தல் கூட்டங்கள், பிரச்சாரத்தில் கரோனா தடுப்பு விதிகளான முகக்கவசம் அணிதல், சமூக விலகல் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வகுத்த விதிகளை யாரும் கடைப்பிடிப்பதில்லை.
நட்சத்திரப் பேச்சாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் என யாரும் கரோனா தடுப்பு விதிகளையும், பாதுகாப்பு வழிகளான முகக்கவசம் அணிந்து பிரச்சாரம் செய்வதையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால், பொதுக்கூட்டங்கள், பிரச்சாரத்துக்குச் செல்லும் வேட்பாளர்கள் , அரசியல் தலைவர்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் ஏற்படுகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள், பேச்சாளர்கள்தான் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் முன் உதாரணமாகத் திகழ வேண்டும். பேரணி, பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன் தொண்டர்கள் அனைவரையும் முகக்கவசம் அணிய அறிவுறுத்த வேண்டும்.
கரோனாவுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டுபவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், பேச்சாளர்கள், வேட்பாளர்கள் இருக்கிறார்கள். சமூக விலகலை வலியுறுத்துவதோடு, முகக்கவசம் அணிதலையும் மக்களுக்கு இவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தேர்தல் ஆணையம் வகுத்த கரோனா தடுப்பு விதிகளை அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பொதுக்கூட்டத்தைத் தடை செய்யவும், வேட்பாளர்கள் பேரணியைத் தடை செய்யவும், அரசியல் தலைவர்கள், பேச்சாளர்களுக்குத் தடை விதிக்கவும் தேர்தல் ஆணையம் தயங்காது''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் முகக்கவசம் அணிந்து பிரச்சாரம் செய்ய உத்தரவிடக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT