Published : 10 Apr 2021 08:53 AM
Last Updated : 10 Apr 2021 08:53 AM
மகாராஷ்டிராவில் வார இறுதி முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.
அதன்படி மகாராஷ்டிராவில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகள், மால்கள், மதுபான விடுதிகள், மூடப்படுகின்றன. ஹோம் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. வார இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவை தவிர மற்ற அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி இன்றும் நாளையும் அங்கு முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த வார இறுதி ஊரடங்கு திங்கள் கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும். மும்பையில் ஒட்டுமொத்த ஊடரங்கு கடைபிடிக்கப்படுவதால் மக்கள் நடமாட்டம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வாகனப் போக்குவரத்தும் இல்லை. இதனால் மும்பை நகரமே வெறிச்சோடியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT