Published : 10 Apr 2021 08:00 AM
Last Updated : 10 Apr 2021 08:00 AM
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் 4-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. 3-ம் கட்டத் தேரத்ல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் மேற்குவங்கத்தில் இன்று 4-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஹவுரா, தெற்கு 24 பர்கனாஸ், ஹூக்ளி, அலிபுர்துவார், கூச் பெஹார் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 373 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 15 லட்சத்து 81 ஆயிரத்து 22 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
மொத்தமுள்ள 15 ஆயிரத்து 940 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 789 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
4-ம் கட்டத் தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ டோலிகஞ்ச் தொகுதியில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர் அருப் பிஸ்வாஸை எதிர்த்து களம் காண்கிறார்.
திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலரும், மாநில அமைச்சருமான பார்த்தா சாட்டர்ஜியை எதிர்த்து பாஜகவைச் சேர்ந்த நடிகை ஷ்ரபந்தி சாட்டர்ஜி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸில் இருந்து சமீபத்தில் விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் ரஜிப் பானர்ஜி, ஹவுராவின் டோம்ஜுர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT