Published : 09 Apr 2021 04:10 PM
Last Updated : 09 Apr 2021 04:10 PM
கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை தற்காலிகமாக நிறத்துங்கள், நாட்டில் தேவையுள்ள ஒவ்வொருவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கரோனாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தடுப்பூசி இன்னும் சில நாட்களுக்கு மட்டும்தான் இருப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தடுப்பூசிக்கு எந்தவிதமான பற்றாக்குறையும் இல்லை என மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த சூழலில் கரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வி எழுப்பிய இருந்தார். அதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடிக்கும், ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ஆழ்ந்த கவலையுடன் இந்தக் கடித்ததை எழுதுகிறேன். மீண்டும் நாம் கரோனா வைரஸின் பிடிக்குள் சிக்கி இருக்கிறோம்.கரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த ஆண்டிலிருந்து நாம் ஈடுகட்டமுடியாத இழப்புகளைச் சந்தித்து வருகிறோம், பல தியாகங்களைச் செய்துவிட்டோம்.
நம்முடைய அறிவியல் வல்லுநர்கள், தடுப்பு மருந்து நிறுவனங்கள் அயராது, கடினமாக உழைத்து கரோனா வைரஸுக்கு தீர்வாக தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால், தடுப்பு மருந்து செலுத்துவதில் மத்திய அரசின் மோசமான திட்டமிடலால், கவனிப்பின்மையால், அவர்களின் உழைப்பு குறைத்து மதிப்பிடப்படுகிறது.
வரலாற்று ரீதியாக தடுப்பூசியை கண்டுபிடித்தல், வடிவமைத்தல் போன்றவற்றில் நாம் அனுபவசாலிகள், மிகப்பெரிய தடுப்பூசி முகாமை நாம் செயல்படுத்தினாலும் தடுப்பூசி செலுத்துவதில் நத்தை வேகத்தில்தான் இருக்கிறோம்.
தற்போதைய சூழலில் இந்திய அளவில் கடந்த 3 மாதங்களில் ஒரு சதவீதம் மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தி இருக்கிறோம். பிற நாடுகள் ஓரளவுக்கு தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்திவிட்டன.
தற்போதுள்ள வேகத்தில் நாம் தடுப்பூசி செலுத்தி, 75 சதவீதம் பேருக்கு செலுத்த பல ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் பொருளாதாரத்திலும், மக்கள் தொகையிலும் பேரழிவான விளைவுகளையும் சந்திக்கலாம்.
நம்முடைய நாடு தடுப்பூசிக்கு பற்றாக்குறையாக இருக்கும் போது, ஏன் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கிறது எனத் தெரியவில்லை. இதுவரை 6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுகிறது என்று மாநிலங்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரோ, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை குறைகூறுகிறார், கூட்டாச்சி தத்துவம் அவசியம் என்று நீங்கள் கூறியதை அவர் குறைத்து மதிப்பிட்டு பேசுகிறார். பலவிதமான முடிவுகளை கவனிக்காமல் எடுத்துவிட்டோம் என இந்த அரசு அடிக்கடி கூறுவதுபோல், தடுப்பூசி ஏற்றுமதியும் கவனிக்காமல் நடந்துவிட்டதா.
நம்முடைய தடுப்பூசி செலுத்தும் திட்டம் என்பது தனிநபர் படத்தை சான்றிதழில் முன்நிறுத்துவதற்கு பதிலாக அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT