Published : 09 Apr 2021 02:42 PM
Last Updated : 09 Apr 2021 02:42 PM
மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மத்தியப்படைகளுக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி பேசியது முற்றிலும் தவறானது, ஆத்திரத்தை தூண்டும் செயல், அவர்களை சோர்வடையச் செய்யும் வார்த்தைகள் என்பதற்கு முகாந்திரம் இருப்பதால், சனிக்கிழமை காலை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மம்தா பானர்ஜிக்கு கடந்த ஒருவாரத்துக்குள் தேர்தல் ஆணையம் அளிக்கும் 2-வது நோட்டீஸ் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் 28ம் தேதி ஒரு தரப்பு மக்களை குறிப்பிட்டு பேசியதற்காக கடந்த 3ம் தேதி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
மம்தா பானர்ஜி தேர்தல் விதிமுறைகள் 186, 189, 505 ஆகிய பிரிவுகளை மீறியுள்ளதாகக் கூறி நேற்று இரவு இந்த நோட்டீஸை தேர்தல் ஆணையம் அணுப்பியது. நாளை காலை 11 மணிக்குள் மம்தா பானர்ஜி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் ஆணையம் அளித்துள்ள நோட்டீஸில் கூறப்படுவதாவது:
மம்தா பானர்ஜி தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, பெண் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்யும்போது, அவர்களை மத்தியப்படைகள் தடுத்தால் தாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். துணை ராணுவம் குறித்து மம்தா பானர்ஜி பேசிய வார்த்தைகள் முற்றிலும் தவறானவை, ஆத்திரமூட்டுபவை, கோபத்தை தூண்டிவிடுவை என்பதற்கு முகாந்திரம் இருக்கிறது.
இதுபோன்ற மம்தா பானர்ஜியின் வார்த்தைகள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப்படைகளை மனச்சோர்வடையச்செய்யும். கடந்த 1980-களில் இருந்து தேர்தல் நடக்கும் போது அளப்பரிய பங்களிப்பைச் செய்து, தேர்தல் அமைதியாக நடத்த பாதுகாப்புப்படையினர் துணை புரிந்து வருகிறார்கள். வெளிப்படையாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த துணைராணுவத்தின் பங்கு முக்கியமானது.
மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் முக்கியப் பங்கு வகிக்கும் துணை ராணுவத்தினர் மீது மம்தா அடிக்கடி இதுபோன்ற மனச்சோர்வடையும், அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.அரசியல் போட்டிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு கையாள்வது என்பது துரதிர்ஷ்டமாக இருக்கிறது.
மம்தா பான்ரஜி தேர்தல் விதிமுறைகளில் 186 பிரிவான அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், 189 அரசு ஊழியருக்கு அச்சத்தை ஏற்படுத்துதல், 505 பிரிவு அவதூறுகளை பரப்புதல் ஆகிய பிரிவுகளை மீறியுள்ளார். இதற்கு சனிக்கிழமை 11 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT