Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM
தமிழகத்தின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி வாதிரியான் ஆகிய ஏழு சமூகங்கள் இடம் பெற்றுள்ளன.
இவை ஒரே சமூகத்தின் 7 பிரிவுகள் எனவும் இவற்றை ‘தேவேந்திரகுல வேளாளர்’ என்று அழைக்கவும் தமிழக அரசும், மத்திய அரசும் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி உள்ளன. இந்த மசோதா தற்போதுகுடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.
இந்த சட்டத் திருத்தத்துக்கு தமிழகத்தின் பல்வேறு வெள்ளாளர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர் பாக அந்த அமைப்புகள் சார்பில் ஒருகுழுவினர் நேற்று டெல்லி வந்துமத்திய சமூகநலத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்தனர். இதில், கன்னியாகுமரி மாவட்ட வெள்ளாளர் பேரவை, தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளர் சங்கம், தமிழர்குடிகள் தாயகம் உள்ளிட்ட அமைப்புகளின் 6 நிர்வாகிகள் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தங்கள் எதிர்ப்பு தொடர்பான மனுவையும் அமைச்சரிடம் அளித்தனர். அந்த மனுவில், "சட்டத் திருத்தத்துக்காக பரிசீலனை செய்த ஹன்ஸ்ராஜ் வர்மா குழு, மானுடவியல் நிபுணர்அறிக்கை ஆகிய இரண்டும் ஒருதலைப்பட்சமானது. ஹன்ஸ்ராஜ்வர்மா குழுவுடன் தமிழர்களின் வரலாற்றாளர், தொல்லியலாளர் மற்றும் தமிழ் கலாச்சார அறிஞர்கள் சேர்க்கப்படவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் வேளாளர் பேரவை கூட்டமைப்பின் அமைப்பாளர் கார்த்திக் பாலா கூறும்போது, “சட்டத் திருத்தத்தின் ஏழு பிரிவினரும் வேளாளர் எனும் மரபிலிருந்து வந்தவர்களே அல்ல. இதற்கு, வேளாளர் மீதான சங்க காலப் பாடல்கள், தொல்லியல் மற்றும் மூவேந்தர் ஆட்சி கால வரலாற்று ஆதாரங்கள் எங் களிடம் உள்ளன. எந்த ஆதாரமும் இன்றி அவர்கள் பெயர் மாற்றப்படுவதால் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் உருவாகும்” என்றார்.
மற்ற பிரதிநிதிகள் கூறும்போது, “இந்த மசோதாவுக்கு எதிராக தமிழக நீதிமன்றங்களில் 8 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு பிறகு அமலுக்கு வரும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT