Last Updated : 12 Nov, 2015 10:02 PM

 

Published : 12 Nov 2015 10:02 PM
Last Updated : 12 Nov 2015 10:02 PM

முஸ்லிம்களும் சம உரிமை பெற்ற இந்தியர்கள் என்பது நேருவின் கருத்து: அலிகர் பல்கலை.யில் மணிசங்கர் அய்யர் உரை

பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ‘முஸ்லிம்களும் சம உரிமை பெற்ற இந்தியர்களே’ என தெரிவித்தார். இதை அப்பல்கலையில் இன்று நேரு மீதான சொற்பொழிவு நிகழ்த்திய காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் அய்யர் குறிப்பிட்டார்.

உபியின் அலிகர் நகரில் அமைந்துள்ள மத்தியக் கல்வி நிறுவனங்களில் ஒன்று அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம். இங்குள்ள நேரு கல்வி ஆய்வு நிறுவனத்தில் முன்னாள் மத்திய அமைச்சரான மணிசங்கர் அய்யர் ‘நேருவின் அரசியல் யுக்திகள்’ என்ற தலைப்பில் இன்று சொற்பொழிவு நிகழ்த்தினார்.

இதில் மணிசங்கர் பேசியதாவது: மதச்சார்பை வளர்க்க முயன்றவர்களுக்கு எதிராகப் போராடத் தயாரான முதல் பிரதமர் நேரு என்பதை இந்நாட்டின் பொதுமக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தனக்கு பின் பிரதமராக வந்தவர்கள் மதநல்லிணக்கத்திற்கு ஆதரவாக செய்ய முடியாததை செய்தவர் நேரு. அவர் நம் நாட்டின் பிரிவினைக்கு பின் அலிகர் முஸ்லிம் பலகலைக்கழகத்தில் ஆற்றிய உரையில், முஸ்லிம்களும் சம உரிமை பெற்ற இந்தியர்களே என குறிப்பிட்டார். இதில், இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் முஸ்லிம் மாணவர்களும் அடங்குவர் என்பதை நம் நாட்டு மக்கள் அனைவரும் உணர வேண்டும் எனவும் நேரு விரும்பினார். ஜவஹர்லால் நேருவின் 125 ஆவது பிறந்த நாள் கொண்டாடும் இந்த தருணத்தில் மத நல்லிணக்கத்தை வளர்க்க அவர் செய்த முயற்சிகளை மறு ஆய்வு செய்து நாட்டுக்கு தெரிவிக்க வேண்டி உள்ளது'' என மணிசங்கர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப் கூறுகையில், ‘பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் அலிகர் பல்கலைக்கழகம் மதவாதிகளின் மிரட்டலுக்கு உள்ளானது. அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திய இராணுவத்தை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி பாதுகாப்பு அளித்தார். அத்துடன் இப்பல்கலை மாணவர்கள் இந்தியாவின் அறிவுஜீவிகளாக வர வேண்டும் என வலியுறுத்தினார். பிரிவினை சமயங்களில் இங்கு மூன்று முறை விஜயம் செய்து நேரு, இப் பல்கலைக்கழகம் விரிவாக்கம் செய்யப்பட்டு அங்கும் இதே கல்வி முறைகள் போதிக்கப்பட வேண்டும் என விரும்பினார். இங்கு பெர்ஷிய மொழி அறிந்த மாணவர்கள் அதிகம் இருப்பதை அப்போது உணர்ந்த நேரு அளித்த நிதி உதவியால் இப்பல்கலை, முகலாயர் வரலாற்று ஆய்வில் முக்கியப் பங்காற்றி வருகிறது.’ என நினைவு கூர்ந்தார்.

பிரபல கல்வியாளரான ஆதித்யா முகர்ஜி கலந்து கொண்டு பேசுகையில், 1951 ஆம் ஆண்டு நேரு அறிமுகப்படுத்திய ஐந்தாண்டு திட்டங்கள் நம் நாட்டின் விவசாயம், தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறந்த பங்காற்றியதாகக் குறிப்பிட்டார்.

மூத்த வரலாற்றாசிரியரான மிருதுளா முகர்ஜி, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் நேரு ஒரு அபரிமிதமான நபர் எனக் குறிப்பிட்டதுடன் அவர் நவீன இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் எனப் பாராட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x