Published : 07 Apr 2021 05:15 PM
Last Updated : 07 Apr 2021 05:15 PM
மகாராஷ்டிராவில் 3 நாட்களுக்கு வேண்டிய தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன, தடுப்பூசி மையங்களில் சிலவற்றில் கரோனா தடுப்பூசி கைவசம் இல்லாமல் மக்களை திருப்பியனுப்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என அம்மாநில மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே கூறினார்.
கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மருந்தும், சீரம் மருந்து நிறுவனத்துடன் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் கட்ட தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இந்த முகாமில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
2-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமின் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவரிடம் சான்று பெற்று வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் அதாவது இணை நோய்கள் இருப்போர் இல்லாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
இணை நோய்கள் இருப்போர் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்தது. அதன்படி அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் 3 நாட்களுக்கு வேண்டிய தடுப்பூசிகள் மட்டுமே உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப்பே கூறியதாவது:
‘‘மகாராஷ்டிராவில் போதுமான அளவு கரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லை. மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். 3 நாட்களுக்கு வேண்டிய தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. தடுப்பூசி மையங்களில் சிலவற்றில் தடுப்பூசி கைவசம் இல்லாமல் மக்களை திருப்பியனுப்ப வேண்டிய சூழல் உள்ளது. இதுமட்டுமின்றி 20 வயது முதல் 40 வயது கொண்டவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.
எனவே மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வேகமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த கூடுதலான தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT