Published : 23 Nov 2015 08:12 PM
Last Updated : 23 Nov 2015 08:12 PM
* உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் பொறியியல் உட்பட அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் 2016 ஆம் ஆண்டு நுழைவுத்தேர்வு அறிவிப்பு இன்று (திங்கள்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
* டெல்லியில் இருந்து 135 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அலிகர் நகரில் உள்ளது அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். நாட்டின் மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி, சர் ஜியாத்தீன் மருத்துவக் கல்லூரி மற்றும் டாக்டர்.ஜாகீர் உசைன் பொறியியல் கல்லூரிகளும் அமைந்துள்ளன.
* அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்விக்கான வகுப்புகளும் நடைபெறுகின்றன. இவை அனைத்திற்கும் ஒவ்வொரு வருடமும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி எம்பிபிஎஸ், பிடிஎஸ், யுனானி மருத்துவத்தின் பி.யூ.எம்.எஸ், பி.டெக், பி.ஆர்க், பி.ஏ, பிகாம் (ஹானர்ஸ்), பிஎஸ்சி, பிஎட், பிஏ எல்.எல்.பி மற்றும் எம்.பி.ஏ பட்டங்களுக்கான கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவது வழக்கம்.
* வரும் 2016 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் பட்டப் படிப்புகளுக்காக நுழைவுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றின் தேர்வு இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. இவற்றில் முதல் தேர்வு ஏப்ரல் 10, 2016 லும், அடுத்தகட்ட தேர்வு மே 29, 2016 தேதிகளிலும் நடைபெறவிருக்கிறது. 5 வருட பட்டப்படிப்பான பிஏ எல்.எல்.பிக்கான நுழைவுத் தேர்வு மே 23, 2016 மற்றும் பி.எட் பட்டக் கல்விக்கு மே 22, 2016 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது.
* பிஏ, பிஎஸ்சி மற்றும் பிகாம்(ஹார்ஸ்) கல்விகளுக்கான நுழைவுத்தேர்வு மே 8, 2016 -ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.யூ.எம்.எஸ், நர்சிங் உட்பட மற்ற பட்டங்களின் கல்விக்கான நுழைவுத்தேர்வு தேதிகள் டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.
* இதற்கான விண்ணப்பங்கள் அலிகர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். அவற்றை இணையதளம் வழியாக பூர்த்தி செய்து, உரிய கட்டணத்துடன் அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
* அனைத்து கல்விப் பிரிவுகளின் உயர்கல்விகளுக்கான எம்.ஏ, எம்.பில் மற்றும் பிஹெச்டி(முனைவர் பட்டம்) பட்டப்படிப்புகளுக்கும் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதற்காக அப்பல்கலையில் 91 வகை கல்விப் பிரிவுகளுக்கான துறைகள் செயல்படுகின்றன. இதில் நவீன இந்திய மொழிகள் துறையில் உள்ள மொழிகளில் ஒன்றாக தமிழும் பயிற்றுவிக்கப்படுகிறது.
* ‘தி இந்து’விடம் தமிழில் முனைவர் பட்டம் பெற பயிலும் 3 மாணவர்களில் ஒருவரான ராஜ்குமார் கூறுகையில், ''ஆங்கிலக் வழிக் கல்வி பயிற்றுவிக்கப்படுவதால் இங்கு இந்தி ஒரு பிரச்சனை இல்லை. கல்வி மற்றும் தங்கும் விடுதிக்கான கட்டணம் மிக மிகக் குறைவு. பல ஆண்டுகளுக்கு முன் இப்பல்கலையில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு வருடமும் கல்வி கற்க வந்து கொண்டிருந்ததாக இங்கு கல்வி பயிற்றுவிக்கும் தமிழர்கள் கூறுவது உண்டு. ஆனால், இப்போது சுமார் 20 பேர் மட்டுமே பயில்கிறோம்'' என தெரிவித்தார்.
* 1875-ம் ஆண்டு சர் சையது அகமது கான் என்பவரால் நிறுவப்பட்ட அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தில் தற்போது சுமார் 37 ஆயிரம் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இவர்களை பயிற்றுவிக்க சுமார் 1700 பேராசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இதன் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் 3600. இங்குள்ள பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த வருடம் எம்.டி.எஸ் பட்டம் பெற்ற சென்னையை சேர்ந்த தீனதயாளன் முதல் மாணவராக தங்கமெடல் பெற்றுச் சென்றார்.
* இப்பல்கலையின் காரணமாகவே புகழ் பெற்ற நகரமாக அலிகரில் இருந்து 90 கி.மீ தொலைவில் ஆக்ரா அமைந்துள்ளது. இதைப் போன்ற மத்திய பல்கலைக்கழகங்கள் உபியின் வாரணாசியில் பனாராஸ் இந்து பல்கலைக்கழகம், அலகாபாத்தில் அலகாபாத் பல்கலைக்கழகம், தலைநகரான லக்னோவில் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் ஆகியன அமைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT