Published : 06 Apr 2021 10:11 AM
Last Updated : 06 Apr 2021 10:11 AM
அசாமில் உள்ள ஹப்லாங் சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் 90 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கத் தகுதியாக இருந்த நிலையில், அங்கு 181 வாக்குகள் பதிவாயின. பெரும் முறைகேடு நடந்ததையடுத்து, 5 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
அசாமில் கடந்த 1-ம் தேதி நடந்த 2-ம் கட்டத் தேர்தலின்போது, ஹப்லாங் தொகுதியில் 74 சதவீதம் வாக்குப்பதிவானது. இதில் 107(ஏ) கோத்லிர் எல்.பி.பள்ளிக்கூடத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குச்சாவடியில் மொத்தமே 90 வாக்காளர்கள்தான் வாக்களிக்கத் தகுதியானவர்கள். இந்நிலையில், வாக்குப்பதிவு முடிவில் இங்கு 181 வாக்குகள் பதிவாயின.
இதையடுத்து, தேர்தல் வாக்குப்பதிவில் பெரும் முறைகேடு நடந்துள்ளதையடுத்து, 5 தேர்தல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து மாவட்டத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி நிதின் கடே நேற்று வெளியிட்ட உத்தரவில், “ ஏப்ரல் 1-ம் தேதி நம்பர் 107(ஏ) கோத்லிர் எல்.பி.பள்ளிக்கூடத்தில் நடந்த வாக்குப்பதிவில் 90 வாக்குகள் பதிவாக வேண்டிய இடத்தில் 181 வாக்குகள் பதிவாகியுள்ளன. முறைகேடான வாக்குப்பதிவு நடத்திய தேர்தல் அதிகாரிகள் சேக்கோசிம் ஹங், பிரகலாத் ராய், பரமேஸ்வர் சரங்சா, ஸ்வராஜ் காந்த் தாஸ், லால்ஜம்லோ தீக் ஆகியோர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார்கள்.
தேர்தல் நடத்தும் அதிகாரியின் டைரி மற்றும் பிற ஆவணங்களை ஆய்வு செய்தபோது இந்த முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 107(ஏ) கோத்லிர் எல்.பி. பள்ளிக்கூடத்தில் மறு தேர்தல் நடத்தவும், இந்த வாக்குப்பதிவு மையத்தோடு தொடர்புடைய பிரதான வாக்குப்பதிவு மையத்திலும் மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
பிரதான வாக்குப்பதிவு மையமான நம்பர் 107, மவுலாதாம் எல்.பி. இடத்தில் 616 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 107(ஏ) கோத்லிர் எல்.பி.பள்ளிக்கூட வாக்குப்பதிவு மையம் முதல் முறையாக இந்த ஆண்டு உருவாக்கப்பட்டது. போக்குவரத்து வசதியில்லாத மக்கள் வந்து வாக்களிக்க இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால், இங்குதான் முறைகேடு நடந்துள்ளது. எந்த மாதிரியான தேர்தல் முறைகேடு நடந்துள்ளது, வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லையா உள்ளிட்டவை குறித்து விசாரணை நடந்து வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரிதுபோரா கான்வார் கூறுகையில், “அசாம் மாநிலத்தில் சுதந்திரமாக, நேர்மையான முறையில் தேர்தல் நடத்துவதை தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கருதவில்லை. தேர்தலைத் தீவிரமாக எடுத்திருந்தால், இதுபோன்ற முறைகேடு நடந்த இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்திருக்கும். ஆனால், இதுவரை உத்தரவிடவில்லை” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT