Published : 05 Apr 2021 03:14 AM
Last Updated : 05 Apr 2021 03:14 AM
மேற்கு வங்க தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து பாஜக மீது பல்வேறு புகார்களை முன்னிறுத்தி பேசி வருகிறார். இவற்றை அவர் மீதே திருப்பி விடும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்வதாகக் கருதப்படுகிறது. இன்னும் ஐந்து கட்ட தேர்தல் பாக்கி உள்ள மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரம் தொடக்கம் முதலாகவே சூடு பிடித்து வருகிறது.
இதன் பிரச்சார மேடைகளில் பேசும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தொடர்ந்து பாஜக மீது பல்வேறு வகையான புகார்களை முன்வைத்து பேசி வருகிறார். இந்த வகையில், அவர் முதன்முறையாக பாஜக கூட்டங்களில் இடப்படும் ஜெய்ராம் கோஷம் மீது விமர்சனம் எழுப்பினார்.
அடுத்து அக்கட்சியை வெளிமாநிலத்தைச் சேர்ந்ததாகக் குறை கூறினார். பிறகு பாஜக தலைவர்களின் பிரச்சாரத்தில் கூடும் திரளானக் கூட்டத்திற்கு பணம் கொடுத்து ஆட்களை சேர்ப்பதாகவும் முதல்வர் மம்தா புகார் கூறத் துவங்கினார். இவற்றை, முதல்வர் மம்தா மீதே திருப்பி விடும் வகையில் பிரச்சார மேடைகளில் பிரதமர் மோடி பேசி வருவதாகக் கருதப்படுகிறது.
இதில் ஜெய்ராம், வெளிமாநிலக் கட்சி ஆகியப் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில்நேற்று முன்தினம் ஹவுராவில் பேசிய பிரதமர் மோடி குறிப்பிடுகையில், ‘தனது தோல்வியை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு,வெளிமாநிலங்களில் ஒரு தொகுதியில் போட்டியிட மம்தாவுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளதாக அறிந்தேன்.
அவர் உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் மக்களவை தேர்தலுக்கு போட்டியிடலாம். இங்குள்ள ஹல்தியாவிலிருந்து வாரணாசிக்கு நாம் கப்பல் போக்குவரத்து விட்டிருக்கிறோம். அவரை பெரிய மனது கொண்ட வாரணாசிவாசிகள் எவரும் வெளிமாநிலத்தவர் எனக் கூற மாட்டார்கள்.
ஆனால், அங்கு மம்தாவுக்கு வேறு ஒரு பிரச்சினை எழும். அங்குள்ளவர்களில் பலரும் நெற்றியில் திலகமிட்டு ஜெய்ராம் எனக் கோஷமிடுவார்களே, அதை மம்தா பானர்ஜி விரும்புவரா எனக் கேள்வி எழுப்பினார்.
பாஜக கூட்டங்களில் பணம்அளிப்பதானப் புகார் குறித்து மற்றொரு மேடையில் பிரதமர் மோடி கூறுகையில், ‘பாஜக கூட்டத்திற்கு பணம் பெற்றுக் கொண்டு பொதுமக்கள் செல்வதாக மம்தா கூறுகிறார். ஆனால் மேற்கு வங்க மாநிலவாசிகள் சுயகவுரவம் கொண்டவர்கள், இவர்களை ஆங்கிலேயர்களாலும் விலை கொடுத்து வாங்க முடியாமல் போனதை அவர் மறந்து விட்டார் போல. இதுபோல், மேற்கு வங்கவாசிகளை அவமானப்படுத்தும் மம்தாவிற்கு உரியபதிலை தம் வாக்குகள் மூலமாக அவர்கள் தருவார்கள்’ எனக் குறிப்பிட்டார்.
திரிணமூல் அதிர்ச்சி
இதுபோன்ற பதில்களுடன், நந்திகிராமில் மம்தா தோற்பார்என்பது போன்ற விமர்சனங்களையும் சற்றும் எதிர்பாராத திரிணமூல் காங்கிரஸார் பிரதமர் மோடி மீது புகார் கூறத் துவங்கி உள்ளனர். மம்தா மீது பிரதமர் மோடி தொடர்ந்து மனோ ரீதியான தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
எனினும், பாஜக மீதான பல்வேறு புதியப் புகார்களை முதல்வர் மம்தாவும் நிறுத்தியபாடில்லை. நேற்று முதல்வர் மம்தா, ஹவ்ராவிற்கு 50 கி.மீ தொலைவிலுள்ள ஒரு பிரச்சார மேடையில் கூறும்போது, ‘மேற்கு வங்கத்தை பாஜக பிரிக்க முயல்கிறது.
இக்கட்சியினர் நம் மாநிலத்துடன் சேர்த்து அதன் கலாச்சாரத்திற்கும், மொழிக்கும் முற்றுப்புள்ளி வைத்து விடுவர். பாஜகவால் நிதியளிக்கப்படும் ஒருகட்சி ஹைதராபாத்திலிருந்து வந்துபோட்டியிடுகிறது. இவர்களுக்கு சிறுபான்மையினர் வாக்களித்து நம் மாநிலத்தை பிளந்து விடாதீர்கள் என கேட்டுக் கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT