Published : 04 Apr 2021 06:28 PM
Last Updated : 04 Apr 2021 06:28 PM
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவாக நான் இருந்ததால், ஆம்ஆத்மி அரசை மத்திய அரசு தண்டித்துவிட்டது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் டெல்லி தலைநகர் அதிகாரத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்தச் சட்டத்தின்படி அதிகாரம் அனைத்தும், துணை நிலை ஆளுநர் வசம் செல்லும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் எந்த அதிகாரமும் இருக்காது. இதைக் குறிப்பிட்டு முதல்வர் கேஜ்ரிவால் பேசினார்
ஹரியாணா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் நடந்த மகாபஞ்சாயத்தில் இன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்றார். அப்போது விவசாயிகள் மத்தியில் கேஜ்ரிவால் பேசியதாவது:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன். மத்திய அரசைப் பொறுத்தவரை யாரேனும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தால் அவர்களைத் துரோகி என்று முத்திரை குத்துகிறார்கள்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக நான் நடந்து கொண்டதால், என்னை பாஜக தலைமையிலான மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து தண்டித்துவிட்டது. இந்தச் சட்டத்தின்படி அதிகாரம் அனைத்தும் துணை நிலை ஆளுநருக்குத்தான் இருக்கும்.இது என்ன மாதிரியான சட்டம் இது, 62 இடங்களை ஆம் ஆத்மி பெற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்தவிதமான அதிகாரமும் இல்லை.
நாடாளுமன்றத்தில் உள்ள ஒவ்வொரு பாஜக உறுப்பினரும், விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த கேஜ்ரிவால் தண்டிக்கப்பட வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள்.
நான் அவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன், நம்முடைய விவசாயிகள் 300 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த போராட்டத்தைக் காரணமாக கேஜ்ரிவால் உயிரிழந்தாலும் நாங்கள் மத்திய அரசின் தண்டனையைப் பார்த்து அஞ்சமாட்டோம். விவசாயிகள் போராட்டத்துக்காக எந்த தியாகத்தையும் செய்வேன்.
விவசாயிகள் தங்கள் நலம் விரும்பிகளாக எங்களைப் பார்க்கிறார்கள். என்னவிதமான தண்டனையை வேண்டுமானாலும் மத்திய அரசு கொடுக்கட்டும், நான் கவலைப்படமாட்டேன். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது, இந்த தேசத்தை விரும்பும் ஒவ்வொருவரின் பொறுப்பாகும். இந்த போராட்டத்தில் விவசாயிகளோடு துணையாக இருப்பவர்தான் தேசபக்தர், விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக இருப்பவர்தான் தேசத்துரோகி.
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT