Published : 04 Apr 2021 05:37 PM
Last Updated : 04 Apr 2021 05:37 PM
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி 900 கோடி ரூபாய் பணம் சம்பாதித்தது எப்படி என பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெற்றது. இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஹவுராவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு மம்தா பானர்ஜி பேசுகையில் ‘‘மோடி சிண்டிகேட் 1, அமித் ஷா சிண்டிகேட் 2. இவர்கள் இருவரும் சேர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகளை எதிர்க்கட்சியினர் மீது ஏவி விடுகின்றனர்.
அபிஷேக் பானர்ஜி வீட்டில் சோதனை நடத்தினர். தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தினர். இதுபோன்ற மிரட்டலால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கி விட முடியாது’’ எனக் கூறியுள்ளார்.
அபிஷேக் பானர்ஜி மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது:
வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு போன்ற மத்திய அரசின் ஏஜென்சிகளை எதிர்க்கட்சியினர் மீது ஏவி விடுகின்றனர் என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். அபிஷேக் பானர்ஜி வீட்டில் சோதனை நடத்தியதாக மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள கடந்த 10 ஆண்டுகளில் அபிஷேக் பானர்ஜி மிகப்பெரிய அளவு பணம் சம்பாதித்துள்ளார். பத்தாண்டுகளில் 900 கோடி ரூபாய் பணம் சம்பாதிக்க ஒருவரால் முடியுமா? இது எவ்வாறு சாத்தியம்.
மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த நிலக்கரி சுரங்க மாபியா கும்பலை இயக்கும் அனுப் மன்ஞ் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும் அவருடன் தொடர்பு கொண்டு தான் இந்த பணம் ஈட்டப்பட்டுள்ளது. இவரது மற்றொரு உறவினர் மிஸ்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு மம்தா பானர்ஜி என்ன பதில் சொல்லப்போகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT