Published : 04 Apr 2021 03:55 PM
Last Updated : 04 Apr 2021 03:55 PM
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்தும் நியாய் திட்டம் நாட்டிலேயே வித்தியாசமானதாக இருக்கும், புரட்சியை ஏற்படுத்தும். மாநிலத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.
கேரள மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் முடிகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது தொகுதியான வயநாட்டில் உள்ள மனன்தாவடி வெள்ளமுண்டாவில் இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தால், நாங்கள் கொண்டுவரும் நியாய் திட்டம் புரட்சிகரமானதாக இருக்கும். இதுவரை இந்தியாவில் எந்த மாநிலமும் சோதித்துப் பார்த்திராத திட்டமாக நியாய் திட்டம் இருக்கும்.
காங்கிரஸ் கட்சி கொண்டுவரும் நியாய் திட்டம் மிகவும் எளிமையானது. மாநிலத்தில் உள்ள ஏழை மக்கள் கையில் பணம் வழங்கப்படும். மிகக்குறைவான பணம் அல்ல, மாதம் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை அவர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வரை பெறுவார்கள். ஒவ்வொரு மாதமும் தவறாமல் குறிப்பிட்ட தேதியில் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.
இந்தத் திட்டம் நிச்சயம் கேரளாவில் மக்கள் மத்தியில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும். பொருளாதாரத்திலும் மாற்றத்தைக் கொண்டுவரும்".
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சி, சமூக உதவித் திட்டங்களுக்கான நிதியை அதிகப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி கடைசியாக ஆட்சியில் இருந்தபோது, முதியோர் உதவித்தொகை ரூ.600 வழங்கப்பட்டு வந்தது. ஆனால், முதல்வர் பினராயி விஜயன் அரசு ரூ.1,600 ஆக உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக திருநெல்லியில் உள்ள விஷ்ணு கோயிலுக்குச் சென்று ராகுல் காந்தி வழிபாடு செய்தார். ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கேசி.வேணுகோபால் சென்றிருந்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபின், அவரது உடலின் அஸ்தி திருநெல்லியில் உள்ள விஷ்ணு கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டு, பாபநிவர்த்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக்கத்தில் குறிப்பிடுகையில், "வயநாட்டில் உள்ள திருநெல்லியில் உள்ள விஷ்ணு கோயிலுக்குச் சென்று அதிகாலை வழிபாடு செய்தேன். நீண்ட காலத்துக்குப் பின் இந்தக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT