Published : 04 Apr 2021 03:09 PM
Last Updated : 04 Apr 2021 03:09 PM
பிரதமர் மோடி என்ன கடவுளா அல்லது வருவதை முன்கூட்டியே கூறும் அபார சக்தி பெற்ற மனிதரா? இன்னும் 6 கட்டத் தேர்தல் இருப்பதால், வெற்றியைப் பற்றிப் பேச முடியாது என்று முதல்வர் மம்தா பானர்ஜி சாடினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் 2 கட்டங்களாக 60 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 3-வது கட்டத் தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கானாகுல் நகரில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பிரதமர் மோடி அவரைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? கடவுள் என நினைக்கிறாரா அல்லது வருவதை முன்கூட்டியே கூறும் சக்தி படைத்தவர் என்று நினைக்கிறாரா? இன்னும் 6 கட்டத் தேர்தல் இருக்கும் நிலையில் வெற்றியைப் பற்றி யாரும் இப்போதே உரிமை கொள்ள முடியாது.
மாநிலத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்கவும், தடுக்கவும் புதிதாக ஒருவர் உருவாகியுள்ளார். பாஜகவிடம் இருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு புதிய கட்சி தொடங்கியுள்ளார். மாநிலத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் சர்ச்சைக்குரிய பேச்சுகளை புதிய கட்சியின் தலைவர் பேசி வருகிறார், ஆனால், அவர் மீது நடவடிக்கை ஏதுமில்லை. (இந்திய மதச்சார்பற்ற முன்னணி கட்சித் தலைவர் அப்பாஸ் சித்திக்கை பெயர் குறிப்பிடாமல் மம்தா குறிப்பிட்டார்)
அமித் ஷாவின் உத்தரவைக் கேட்டு, தேர்தல் ஆணையம் மாநிலத்தில் ஏராளமான போலீஸாரை இடமாற்றம் செய்துள்ளது.
உத்தரப் பிரதேசம், பிஹாரிலிருந்து குண்டர்களை அழைத்து வந்து, மேற்கு வங்கத்தைக் கைப்பற்ற குஜராத்திகள் முயல்கிறார்கள். மேற்கு வங்கம் குஜராத்தாக மாற நாம் அனுமதிக்கக் கூடாது. மதரீதியாக மக்களிடம் வேறுபாட்டையும், கலவரத்தையும் உருவாக்க பாஜக முயல்கிறது.
விவசாயிகளுக்கு மிகப்பெரிய அளவில் நிதியுதவி அளிப்பது குறித்து பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். நான் ஏற்கெனவே விவசாயிகளின் பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பிவிட்டேன். ஆனால், மத்திய அரசு இதுவரை விவசாயிகளுக்கான நிதியை வழங்கவில்லை''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, "மாநிலத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும். முதல்வராகப் பதவி ஏற்பவர் முதல் நாளிலேயே பிஎம் கிசான் திட்டத்தில் கையொப்பமிடுவார். 2 கட்டத் தேர்தலிலும் திரிணமூல் காங்கிரஸ் தோல்வி அடையும். மம்தா தோல்வியை ஒப்புக்கொண்டதன் அடையாளமாகவே அவரது பேச்சு இருக்கிறது. 2024-ம் ஆண்டு வாரணாசியில் மம்தா போட்டியிடலாம்" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT