Last Updated : 04 Apr, 2021 01:58 PM

1  

Published : 04 Apr 2021 01:58 PM
Last Updated : 04 Apr 2021 01:58 PM

மேற்கு வங்கத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்; என்ஆர்சி குறித்து திட்டம் இல்லை: விஜய் வர்க்கியா உறுதி

பாஜக தேசியப் பொதுச் செயலாளர் விஜய் வர்க்கியா: கோப்புப் படம்.

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நிச்சயமாகக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம். அகதிகளுக்குக் குடியுரிமையை வழங்குவோம் என்று மேற்கு வங்க பாஜக பொறுப்பாளரும், தேசியப் பொதுச் செயலாளருமான விஜய் வர்க்கியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 2 கட்டத் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், 3-வது கட்டம் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

இந்தச் சூழலில் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளரும், தேசிய பொதுச் செயலாளருமான விஜய் வர்க்கியா பேட்டி அளித்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

''பாஜக தேர்தல் வாக்குறுதியில் கூறியுள்ளபடி மேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வந்தால், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். கட்டாய மதமாற்றத்துக்கு அஞ்சி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் குடியுரிமையை வழங்குவோம். அதேசமயம், என்ஆர்சியை நடைமுறைப்படுத்துவது குறித்து எங்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் நடைமுறைப்படுத்தினால், இங்குள்ள 72 லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள். பாஜகவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது. ஏராளமான மக்களுக்குக் குடியுரிமை கிடைக்கும் இந்தச் சட்டத்தை ஏன் திரிணமூல் காங்கிரஸ் எதிர்க்கிறது?

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டுகிறார். நான் கேட்கிறேன், மம்தா பானர்ஜி இரு சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளார். அப்போது தேர்தல் ஆணையம் தனக்கு ஆதரவாகச் செயல்பட்டது என்று ஏன் மம்தா கூறவில்லை. தேர்தலில் மம்தா பானர்ஜி வென்றால் மட்டும் தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட்டுள்ளது. ஆனால், மம்தா தோல்வியை நோக்கிச் செல்லும்போது, தேர்தல் ஆணையத்தைக் குற்றம் சாட்டுகிறார்.

மம்தா பானர்ஜி கூறும் குற்றச்சாட்டு முட்டாள்தனமானது.தோல்வியின் அச்சத்தில் பாஜக மீது இதுபோன்ற அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். உறுதியாக 200 இடங்களை வெல்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது. இந்த மாநிலத்தில் இதுவரை யார் முதல்வர் என்ற ரீதியில் யாரையும் முன்நிறுத்தி தேர்தலைச் சந்திக்கவில்லை. எங்கள் சித்தாந்தம், கொள்கை தெளிவாக இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், எங்களின் சட்டப்பேரவைக் குழு கூடி, கட்சியின் உயர்மட்டம் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதை நடைமுறைப்படுத்துவோம்.

மேற்கு வங்க மக்கள் உண்மையான மாற்றத்துக்குத் தயாராகிவிட்டார்கள். நீண்டகால அட்டூழியங்கள், கவலைகள், ஊழல்கள், சமாதானப்படுத்தும் அரசியல் ஆகியவற்றிலிருந்து விடுபட மக்கள் விரும்புகிறார்கள்''.

இவ்வாறு விஜய் வர்க்கியா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x