Published : 03 Apr 2021 05:49 PM
Last Updated : 03 Apr 2021 05:49 PM
காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் எனக் கூறும் மோடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என ஏன் ஒருபோதும் கூறுவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் கோயிலாண்டி நகரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் கூறியதாவது:
''பிரதமர் மோடி எங்கு சென்றாலும் காங்கிரஸ் இல்லாத இந்தியா (காங்கிரஸ் முக்த் பாரத்) என்று முழக்கமிடுகிறார். காலையில் தூங்கி எழுந்தாலும், இரவு தூங்கப் போனாலும் காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றுதான் மோடி கோஷமிடுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா என்று ஒருபோதும் பிரதமர் மோடி ஏன் கூறுவதில்லை? ஏனென்றால், இடதுசாரிகளுடன் பிரதமர் மோடிக்கு ஒருபோதும் பிரச்சினையில்லை. காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் அவருக்குப் பிரச்சினை.
காங்கிரஸ் என்பது ஒருங்கிணைந்த அமைப்பு. இடதுசாரிகள் பிரிவினை சிந்தனை கொண்டவர்கள். நாங்கள் எங்கு சென்றாலும் ஒவ்வொருவரையும் ஒருங்கிணைப்போம். வலிமையான ஒருங்கிணைந்த படையை உருவாக்குவோம்.
யாரெல்லாம் ஒற்றுமையாக இருக்கிறார்களோ அவர்களிடம் இருந்துதான் அச்சுறுத்தல் வரும் என்பதை ஆர்எஸ்எஸ் புரிந்து கொண்டுள்ளது. இடதுசாரிகள் சமூகத்தைப் பிரிப்பவர்கள். இடதுசாரிகளின் சித்தாந்தம் என்பது வன்முறை, கோபம். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒருபோதும் கோபத்தையோ, வெறுப்பையோ பரப்பாது. ஒருங்கிணைக்கவே செய்யும்.
எந்தவிதமான பிரிவினை இருந்தாலும் அது நாட்டையும், மாநிலத்தையும் பலவீனமாக்கும். அனைத்து இந்தியர்களும் சமம், ஒற்றுமையாக இருந்தால்தான் நாட்டின் வளர்ச்சி இருக்கும் எனும் சித்தாந்தத்தை காங்கிரஸ் நம்புகிறது.
இந்தியாவில் இன்று நீங்கள் பார்க்கும் வளர்ச்சி, எந்த பெரிய பொதுத்துறை நிறுவனங்களைப் பார்த்தாலும் அது காங்கிரஸ் சித்தாந்தத்தால் உருவானதுதான். தேசத்தின் வெற்றி என்பது இதுவரை தேசத்தின் மக்களாலும், காங்கிரஸ் கட்சியாலும் கிடைத்தது.
கேரளாவில் இடதுசாரி அரசில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கொல்லப்பட்டார்கள், வன்முறை நிலவுகிறது. ஆனால், காங்கிரஸ் தொண்டர்கள் யாரையும் கொல்லவில்லை.
கேரள மீனவர்கள் முதுகில் இடதுசாரி அரசு குத்திவிட்டது. ரூ.5 ஆயிரம் கோடிக்கு அமெரிக்க நிறுவனத்துடன் மீன் பிடிக்க ஒப்பந்தம் செய்தது கேரள அரசு. ஆனால் கடும் எதிர்ப்புக்குப் பின் அந்த உத்தரவு ரத்தானது.
கேரளாவில் வேலையின்மை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க திறன் மேம்பாட்டுப் பயிற்சியைக் காங்கிரஸ் அரசு உருவாக்கும். அறிவார்ந்த தீர்வுகளுடன் ஆட்சிக்கு வருவோம். தீர்வுகளைக் கண்டுபிடிக்க நாங்கள் காரல் மார்க்ஸ் புத்தகத்தைப் பார்க்கமாட்டோம்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT