Published : 03 Apr 2021 01:54 PM
Last Updated : 03 Apr 2021 01:54 PM
கேரளாவில் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு கட்சியினரும் பிரம்மாண்டமாக நடத்தும் "கொட்டிக்கலசம்" எனும் தேர்தல் பிரச்சாரத்துக்குத் தேர்தல் ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலையடுத்து தடுக்கும் நோக்கில் தேர்தல் அதிகாரி பரிந்துரையை அடுத்து இந்த முடிவைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு கட்சியும் தங்களின் பிரம்மாண்டத்தையும், தங்கள் கட்சியின் வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில், ஆதரவாளர்களைத் திரட்டி ஊர்வலம், பிரச்சாரம் செய்யும். இதற்கு 'கொட்டிக்கலசம்' என்று பெயர்.
கேரளாவில் தற்போது கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, 'கொட்டிக்கலசம்' பிரச்சாரத்தை நடத்த அனுமதித்தால் கரோனா வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
இதையடுத்து, மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் கட்சிகளால் நடத்தப்படும் 'கொட்டிக்கலசம்' நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும். இதை அனுமதித்தால், ஏராளமானோர் பங்கேற்பார்கள், கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் எனத் தலைமைத் தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா, தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டார்.
மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியின் கோரிக்கையை ஏற்ற தலைமைத் தேர்தல் ஆணையம், கேரளாவில் 'கொட்டிக்கலசம்' பிரச்சாரத்துக்கு நேற்று தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி டீகா ராம் மீனா நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், "மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலைக் கருத்தில் கொண்டு, ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிகளும் நடத்தும் 'கொட்டிக்கலசம்' தேர்தல் பிரச்சாரத்துக்குத் தடை விதிக்கப்படுகிறது. மாநிலத்தில் எந்த மாவட்டத்திலும் 'கொட்டிக்கலசம்' பிரச்சாரம் செய்யக்கூடாது. அவ்வாறு தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் பிரச்சாரத்தில் சிறுவர், சிறுமியர்களைப் பயன்படுத்தி பிரச்சாரம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக எங்கும் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் செய்வதோ, பாடல்கள் ஒலிக்கவிடுவதும் தடை செய்யப்படுகிறது.
வாக்குப்பதிவுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக பைக் மூலம் கட்சியினர் ஊர்வலமாகச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
ஏப்ரல் 29-ம் தேதி இரவு 7.30 மணி வரை தேர்தல் தொடர்பான எந்தவிதமான கருத்துக்கணிப்புகளும் வெளியிடவும் தடை விதிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT