Published : 03 Apr 2021 10:46 AM
Last Updated : 03 Apr 2021 10:46 AM
கரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர ஓரிரு நாளில் கடுமையான விதிமுறைகள் அமலுக்குக் கொண்டுவரவிருப்பதாகவும், ஊரடங்கு வராது என்று உறுதியாக சொல்ல முடியாது என்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் அன்றாடம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மக்களுக்கு சமூக வலைதளம் வழியாக கரோனா நிலவரம் பற்றி முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.
ட்விட்டர் தளத்தில் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது:
இன்று ஒரே நாளில் எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்துவிட்டன. அத்தனையும் மகாராஷ்டிராவில் ஊரடங்கு அமலுக்கு வருகிறதா என்ற விசாரணையாகவே இருந்தன. முதலில் நான் உங்களை பயமுறுத்த விரும்பவில்லை. உண்மை நிலவரம் என்னவென்பதை மட்டுமே உங்களிடம் சொல்லப் போகிறேன்.
கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கி ஒராண்டாகிவிட்டது. ஜனவரி, பிப்ரவரியில் கரோனா கடந்த கால அச்சுறுத்தலாகிவிட்டதோ என்று எண்ணுமளவுக்கு தொற்று குறைந்தது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக மார்ச் மாதத்திலிருந்து கரோனா இரண்டாவது அலை தொடங்கிவிட்டது. முன்பைவிட வீரியமாக பரவல் இருக்கிறது. ஊரடங்கு அமலுக்கு வருகிறதா என்பது குறித்து நான் இப்போது பேச விரும்பவில்லை. ஆனால், நிலவரத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லிவிட வேண்டும் என விரும்புகிறேன்.
கடந்த ஆண்டு தொற்று தொடங்கியபோது நமக்கு 2 பரிசோதனைக் கூடங்களே இருந்தன. இப்போது 500 கோவிட் பரிசோதனை மையங்கள் உள்ளன. மும்பையில் மட்டுமே தினமும் 50000 பேருக்கு பரிசோதனை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் தினமும் 1.82 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்படுகிறது.
மத்திய அரசின் பரிந்துரையின்படி 70% பரிசோதனை ஆர்டிபிசிஆர் முறையில் நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் 10000 படுக்கை வசதிகள் கூட இல்லை. இப்போது போர்க்கால அடிப்படையில் மருத்துவ வசதிகளை ஏற்படுத்துகிறோம்.
ஜனவரி இறுதியில் அன்றாடம் 350 பேருக்கு பாதிப்பு என்றளவில் தொற்று நிலவரம் இருந்தது. இப்போது, தினமும் 40 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்புகள் பதிவாகின்றன.
தனிமைப்படுத்துதல் வார்டுகளில் 62% படுக்கை வசதியும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 48% மும் நிரம்பிவிட்டன. வென்டிலேட்டர்களும் 25% பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.
ஆனால், ஓராண்டாக நமது மருத்துவர்கள், செவிலியர்கள், ஆஷா ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் ஓய்வின்றி உழைக்கின்றனர்.
அவர்களில் பலர் கோவிட் பாதிப்பு ஏற்பட்டு மீண்டு வந்து பணி செய்கின்றனர். இரண்டு, மூன்று நாட்களில் பணிக்குத் திரும்புகின்றனர். அவர்களுக்கு சிறிய ஓய்வு கொடுக்க வேண்டாமா?
தடுப்பூசி பணியையும் துரிதப்படுத்தி வருகிறோம். மத்திய அரசிடமிருந்து கூடுதல் தடுப்பூசியை கோரியுள்ளோம். அது கிடைத்தவுடன் அன்றாடம் 6 முதல் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும். நாம் மாஸ்க் அணிய வேண்டும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.
இன்னும் கடினமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலை உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அது தொடர்பான அறிவிப்புகள் வரும். நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்களுடன் ஆலோசித்து வருகிறேன். மாற்றுத் தீர்வு ஏதேனும் கிடைக்குமா என ஆராய்ந்து வருகிறேன்.
இன்று நான் முழு ஊரடங்கு குறித்த சொல்லிவைக்கிறேன். ஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இன்னும் இரு தினங்களில் மாற்றம் வந்தால் ஊரடங்கு தவிர்க்கப்படும்.
உலகளவில் கரோனா மூன்றாவது அலை வந்துவிட்டது. இன்னும் அடுத்தடுத்த அலைகள் வராமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து தடுக்க வேண்டும். உங்கள் குடும்பத்தில் ஒருவராக என்னைக் கருதுங்கள். உங்கள் நலன் காக்க வேண்டியது எனது கடமை. விமர்சனங்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை.
கடந்த ஆண்டு ஒத்துழைத்தது போல் நீங்கள் இப்போதும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறேன். மருத்துவ வசதிகளை நல்குவதில் மகாராஷ்டிர அரசு ஒருபோதும் சறுக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT