Published : 03 Apr 2021 06:19 AM
Last Updated : 03 Apr 2021 06:19 AM
"நந்திகிராம் தொகுதியில் வரலாறு காணாத வெற்றியை பெறுவேன் என்பதால் வேறு எந்த தொகுதியிலும் நான் போட்டியிட வேண்டிய அவசியமில்லை" என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் தேர்தலை சந்தித்தது. இங்கு மம்தாவுக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவரான சுவேந்து அதிகாரி போட்டியிட்டார்.
இவர், அந்தத் தொகுதியில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர் என்பதால், இத் தேர்தலானது மம்தா பானர்ஜிக்கு மிகவும் சவா
லாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி கேள்வி
இந்த சூழலில், மேற்கு வங்க மாநிலம் உலுபேரியா பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரச்சாரம் மேற்கொண்
டார். அப்போது அவர், “நந்திகிராம் தொகுதியில் தான் தோல்வி அடைவது உறுதி என்பது மம்தாவுக்கு தெரிந்துவிட்டது. அதனால், இறுதிக்கட்ட தேர்தலில்வேறு ஏதேனும் தொகுதியில் போட்டியிட அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா என்பதை மம்தா தெரிவிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், கூச்பிஹாரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
நந்திகிராம் தொகுதியில் நான் வரலாறு காணாத வெற்றியை பெறுவேன். ஆதலால், வேறு தொகுதியில் போட்டியிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படியே இருந்தாலும், நீங்கள் இந்த விஷயத்தில் எங்களுக்கு யோசனை கூறவோ, அறிவுரை கூறவோ தேவையில்லை.
ஏனெனில், நாங்கள் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கிடையாது. எனவே, எங்களைக் கட்டுப்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டாம். முடிந்தால், உங்கள் கட்சியினரை கட்டுப்படுத்துங்கள்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT