Published : 02 Apr 2021 05:49 PM
Last Updated : 02 Apr 2021 05:49 PM

டெல்லியில் லாக்டவுன் இல்லை: அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டம்

புதுடெல்லி

டெல்லியில் கரோனா தொற்று முன்பு இருந்தது போல தற்போது இல்லை, அதனால் லாக்டவுன் அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில் டெல்லியிலும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், மருத்தவ துறை நிபுணர்களுடன் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லியில் கரோனா பரவல் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கரோனாவை பொறுத்தவரையில் முதல் அலைக்கும் அடுத்தடுத்த அலைக்கும் வித்தியாசம் உண்டு. பெரும்பாலானவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

எனவே உடனடியாக லாக்டவுன் அமல்படுத்த வேண்டிய தேவையில்லை. எனினும் கரோனா பரவாமல் இருக்க கட்டுப்பாடுகள் அவசியம். அதனை மக்கள் பின்பற்ற வேண்டும். தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைான நடவடிக்கைகளை எடுப்போம். தற்போதைய சூழலில் லாக்டவுன் கொண்டு வர வேண்டிய தேவையில்லை’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x