Published : 02 Apr 2021 05:41 PM
Last Updated : 02 Apr 2021 05:41 PM
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசிலும், கேரள மாநிலத்தில் வாரிசு அரசியல்தான் முன்னெடுக்கப்பட்டது. நிர்வாகம் பின்தங்கிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தீவிரப் பிரச்சாரத்தில் பாஜக ஈடுபட்டுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டம் கொன்னி நகரில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''பணம் சம்பாதிக்கும் ஆசை அதிகமாகும்போது, வாரிசு அரசியலை முன்னெடுத்தல், வாக்கு வங்கி அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது இருக்கும். இயல்பாகவே நிர்வாகம் என்பது பின்தங்கிவிடும். கேரளாவில் யுடிஎஃப், எல்டிஎஃப் கொண்டுவந்த அரசுகள் மாநிலத்தை முடமாக்கிவிட்டன.
இந்த இரு கட்சிகளிடம் இருந்து மக்கள் விடுதலை பெற வேண்டிய நேரம். இரு கட்சிகளும் 7 விதமான பாவங்களைச் செய்துள்ளன. வாரிசு அரசியல், யுடிஎஃப், எல்டிஎஃப் இரு கூட்டணிகளும் வாரிசு அரசியலை ஊக்கப்படுத்தின. இதனால் மற்ற நல்ல விஷயங்கள் அனைத்தும் ஓரங்கட்டப்பட்டன. இடதுசாரி தலைவர் மகனின் வழக்கு என்னவென்று உங்களுக்குத் தெரியும். அதை விளக்கமாக நான் கூற விரும்பவில்லை.
எல்டிஎஃப், யுடிஎஃப் இரு கூட்டணிகளுமே அகங்காரம் பிடித்தவை. தங்களை யாரும் தோற்கடிக்க முடியாது என்று நினைத்துக் கொள்கின்றன. இதனால், தங்களின் வேரிலிருந்து துண்டித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றொரு பாவம் பணம் ஈட்டும் பேராசை. சோலார் பேனல் ஊழல், டாலர் ஊழல், தங்கக்கடத்தல், லஞ்ச ஊழல், சுங்க ஊழல் எனப் பட்டியல் முடிவில்லாமல் செல்கிறது. ஒவ்வொரு துறையிலும் இரு கூட்டணிகளும் கொள்ளையடித்துள்ளன. ஊழல் செய்வதில் எல்டிஎஃப், யுடிஎஃப் இரு கூட்டணிகளும் ஒருவரோடு ஒருவர் பொறாமை கொண்டு ஊழல் செய்யக்கூடியவர்கள்.
சபரிமலை விவகாரத்தில், அப்பாவி பக்தர்கள் மீது இடதுசாரி அரசு தடியடி நடத்தியது. நான் கேட்கிறேன், அப்பாவி பக்தர்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தினீர்கள். எந்த அரசாவது, அப்பாவி பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவார்களா? எனக்குப் புரியவில்லை. தனது சொந்த மக்களையே திரும்பத் திரும்ப ஓர் அரசு தாக்குமா?.
கேரள மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உங்களிடம் வந்துள்ளது. என்னுடைய தொலைநோக்கான பார்வையான ஃபாஸ்ட் (FAST) என்பது, மீன்வளம், உரம் தயாரிப்பு, வேளாண்மை, ஆயுர்வேதம், திறன் மேம்பாடு, சமூக அதிகாரமளித்தல், சுற்றுலா, தொழில்நுட்பம் ஆகியவற்றை வளர்த்தலாகும்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT