Published : 02 Apr 2021 03:33 PM
Last Updated : 02 Apr 2021 03:33 PM
பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொதுப் போக்குவரத்து போன்றவை கரோனாவை வெகு வேகமாக பரப்புவதில் முக்கிய பங்காற்றி வருவதாக இந்திய மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் உறுப்பினர் ரவி வாங்கேட்கர் கூறியதாவது:
மும்பை உட்பட பெரும் நகரங்களில் கரோனா பரவல் பெரும் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புரங்களில் குறைவாக உள்ளது. நகரங்களில் கரோனா வெகு வேகமாக பரவுவதற்கு பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது போக்குவரத்து போன்றவை முக்கிய காரணியாக உள்ளன. குறிப்பாக மெட்ரோ உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து கரோனாவை மிக வேகமாக பரப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த இடங்களில் ஒரே நேரத்தில் கரோனா தொற்றுடைய பலர் இருக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கரோனா வேகமாக பரவுகிறது. நாங்கள் நடத்திய ஆய்வில் இது உறுதிப்பட்டுள்ளது. எனவே இந்த இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
இங்கு செல்பவர்கள் கூடுதல் கவனமாக செயல்பட வேண்டும் கரோனாவை வெகு வேகமாக பரப்புவதில் முக்கிய பங்காற்றி வரும் காரணிகளை கண்டறிந்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT