Published : 02 Apr 2021 01:50 PM
Last Updated : 02 Apr 2021 01:50 PM
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோற்பார். மேற்கு வங்கத்தில் நடந்த 2 கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் இரு கட்டத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் 3-வது கட்டத் தேர்தல் 31 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான தீவிரப் பிரச்சாரத்தில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
2-ம் கட்டத் தேர்தல் 30 தொகுதிகளுக்கு நடந்தாலும், அதில் நந்திகிராம் தொகுதி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. நந்திகிராம் தொகுதியில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து, பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், கூச்பெஹர் மாவட்டத்தில் உள்ள சித்தால்குச்சி நகரில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மேற்கு வங்கத்தின் வடக்குப் பகுதி எல்லையில், எல்லை தாண்டி சட்டவிரோதமாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், இதை திரிணமூல் அரசு ஒருபோதும் தடுத்து நிறுத்தாது. எங்களால் மட்டுமே முடியும்.
மம்தா பானர்ஜி இந்த அரசை மிரட்டிப் பணம் பறித்தல், சர்வாதிகாரம், மற்றவர்களைச் சமாதானப்படுத்துதல் ஆகிய ஆயுதங்கள் மூலம்தான் ஆட்சி நடத்தி வருகிறார். இந்தத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதுவரை நடந்த முதல் இரு கட்டத் தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைவார்.
இந்த பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி ஏதும் செய்யவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபின், வடக்கு வங்காள மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் கோடி செலவிடப்படும்.
புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்குவோம். கூச்பெஹர் மாவட்டத்துக்கு மட்டும் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை பயன்படாமல் ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் பயன்படும்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT