Published : 02 Apr 2021 01:22 PM
Last Updated : 02 Apr 2021 01:22 PM

மேற்குவங்க தேர்தலில் 200 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே திரிணமூல் ஆட்சியமைக்க முடியும்:  மம்தா பானர்ஜி மீண்டும் எச்சரிக்கை

கொல்கத்தா

மேற்குவங்க தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் 200 இடங்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டும், அப்போது மட்டுமே நம்மால் ஆட்சியமைக்க முடியும் என அக்கட்சித் தொண்டர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மேற்குவங்க தேர்தலில் தீவிர பிரச்சாரம் செய்து வரும் முதல்வர் மம்தா பானர்ஜி புதிய புகார் தெரிவித்தார். தனது கட்சி குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தால் தனது எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடி விடும் என அச்சம் தெரிவித்தார்.

முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘நான் மட்டும் இந்த தேர்தலில் வென்றால் ஆட்சி அமைத்து விட முடியாது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 291 தொகுதிகளிலும் இந்த வெற்றியை பெற வேண்டும்.

மீதம் உள்ள தொகுதிகளில் எங்கள் நண்பர்கள் டார்ஜிலிங் மலைப்பகுதியின் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவை அனைத்திலும் நம் கட்சி குறைந்தது 225 முதல் 230 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இல்லையென்றால், சில துரோகிகளின் உதவியுடன் ஐந்து கோடி ரூபாய் வரை அளித்து பாஜக வேட்டையாடி விடும். எனவே, பொதுமக்கள் எங்களுக்கு அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும்.’’ எனத் தெரிவித்தார்.

இந்தநிலையில் மீண்டும் இதனை அவர் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராமில் கடந்த 5 நாட்களாகத் தங்கியிருந்தார். நந்திகிராமில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி இன்று காலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நந்திகிராமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்கத்தா சென்ற அவர் அங்கிருந்து பிரச்சாரம் செய்ய மற்ற பகுதிகளுக்கு செல்கிறார்.

இன்று அவர் அலிபூர், கூச் பிஹார் உள்ளிட் மாவட்டங்களில் 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். நந்திகிராமில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவருக்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். பின்னர் கூச் பிஹாரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு. ஆனால் அதேசமயம் நாம் 200 இடங்களில் வெற்றி பெற்றே ஆக வேண்டும். அப்போது மட்டுமே நம்மால் ஆட்சியமைக்க முடியும். அதனால் அதிகமான இடங்களில் வெற்றி பெறுவதை திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும்’’ எனக் கூறினார்.

மேற்குவங்க மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 148 இடங்களில் வெற்றி பெற்றாலே அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியும். ஆனால் 200 இடங்களுக்கு குறைவாக இருந்தால் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுத்து பாஜக ஆட்சியமைத்து விடும் என அவர் தொடர்ந்து எச்சரித்த வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x