Published : 02 Apr 2021 12:27 PM
Last Updated : 02 Apr 2021 12:27 PM
மருத்துவ ஆலோசனையின்படி கூடுதல் முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் அண்மை காலமாக கரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81,466 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பல்வேறு பிரபலங்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கடந்த மாதம் 27-ம் தேதி தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டு இருந்தார்.
கரோனா உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இல்லத்தில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன், மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன் எனக் கூறியிருந்தார்.
இந்தநிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சச்சின் டெண்டுல்கர் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியுள்ளதாவது:
‘‘உங்களது பிரார்த்தனை மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றி. மருத்துவ ஆலோசனையின்படி கூடுதலான முன்னெச்சரிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். அடுத்த சில நாட்களில் நான் வீடு திரும்புவேன் என நம்புகிறேன். ஒவ்வொருவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருங்கள்’’ எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT