Last Updated : 02 Apr, 2021 12:30 PM

8  

Published : 02 Apr 2021 12:30 PM
Last Updated : 02 Apr 2021 12:30 PM

அசாம் தேர்தல்; பாஜக எம்எல்ஏ காரில் எடுத்துச் செல்லப்பட்ட இவிஎம் இயந்திரம்; தேர்தல் ஆணையம் வினோத விளக்கம்: 4 அதிகாரிகள் சஸ்பெண்ட்

பாஜக வேட்பாளர் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட இவிஎம் இயந்திரங்கள்: படம் உதவி | ட்விட்டர்.

கரிம்கஞ்ச்

அசாம் மாநிலத்தில் நேற்று நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தநிலையில் கரீம்கஞ்ச் பதார்கண்டி எம்எல்ஏ கிருஷ்னேந்து பால் வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதுகுறித்துத் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், ட்விட்டரில் மட்டும் வினோத விளக்கம் அளித்துள்ளது.

அசாம் மாநிலத்தில் நேற்று 39 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. சில இடங்களில் நடந்த வன்முறைச் சம்பவங்களைத் தவிர பெரிதாக எங்கும் நடக்கவில்லை. 76 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது.

இதில் கரீம்கஞ்ச் பகுதியில் நடந்த வன்முறைச் சம்பவம்தான் சமூக வலைதளத்தில் பெரிதாகப் பகிரப்பட்டது. தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தபின், கரீம்கஞ்ச் ரத்னாரி தொகுதிக்கு உட்பட்ட எம்.வி. பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடிக்கு வாக்கு இயந்திரங்களை ஏற்றிச் செல்வதற்குத் தேர்தல் ஆணையம் சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த வாகனம் வருவதற்கு மிகவும் தாமதமானது.

இதனால், வாக்குப்பதிவு மையத்தின் பொறுப்பு அதிகாரி திடீரென தனியார் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஏற்றிக்கொண்டு சென்றார். இந்த வாகனம் பத்தார்கண்டி தொகுதி பாஜக எம்எல்ஏவுக்குச் சொந்தமானது என்பது பின்னர்தான் தெரிந்தது.

ஆனால், பாஜக எம்எல்ஏவுக்குச் சொந்தமான வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டதை அசாம் பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலானது.

இதையடுத்து, திடீரென அந்த வாகனத்தை மறித்த ஒரு கும்பல், தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்யாத வாகனத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு ஏற்றிச் செல்ல முடியும் எனக் கூறி தகராறில் ஈடுபட்டனர். அந்த ஜீப் மீதும் தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புக்கு வந்த போலீஸார் தடியடி நடத்தி, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, அந்த கும்பல் கலைந்து சென்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் ட்விட்டரில் அளித்துள்ள விளக்கத்தில், "பதார்கண்டி தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நேற்று எடுத்துச் சென்றபோது, ஒரு கும்பல் தேர்தல் ஆணையத்துக்குச் சொந்தமில்லாத அந்த ஜீப்பை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியது.

தேர்தல் ஆணையத்தின் வாகனம் பழுதடைந்ததால், தனியாருக்குச் சொந்தமான ஜீப்பில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன. ஆனால், நீண்டநேரத்துக்குப் பின்புதான் அந்த ஜீப் பாஜக வேட்பாளருடையது என்பது தெரிந்தது" எனத் தெரிவிக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட கார் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீஸார் அடையாளம் தெரியாதவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அந்த கும்பல் நடத்திய தாக்குதலில் இவிஎம் இயந்திரங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இவிஎம் இயந்திரங்களைக் கவனக்குறைவாகக் கையாண்டதற்காக கரீம்கஞ்ச் பொறுப்பு தேர்தல் அதிகாரிகள் 4 பேரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு தேர்தல் நடத்தவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x