Published : 02 Apr 2021 12:02 PM
Last Updated : 02 Apr 2021 12:02 PM

மகாராஷ்டிராவில் லாக்டவுன் அமல்? - உத்தவ் தாக்கரே இன்று ஆலோசனை

மும்பை

மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில் கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மகாராஷ்டிராவின் புனே, அமராவதி மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. யவத்மால் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாக்பூரில் முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகஅளவில் காணப்படுகிறது. அங்கும் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்றது. இந்தநிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்த ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர்கள் குழுவும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமான கட்டுப்பாடுகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பல மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன் பயன் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெறுகிறது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x