Published : 28 Nov 2015 03:33 PM
Last Updated : 28 Nov 2015 03:33 PM

மதுவிலக்கு: என்ன சொல்கிறார்கள் பிஹார் மக்கள்?

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பிஹாரில் 2016 ஏப்ரல் 1-ம் தேதி மதுவிலக்கு அமலுக்கு வரும் என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்புக்கு பரவலாக நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் தமிழக எதிர்க்கட்சியினர் பலரும் பிஹார் வழியைப் பின்பற்றி மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மதுவிலக்கு அறிவிப்பு குறித்து பிஹார் மாநில மக்கள் என்ன நினைக்கிறார்கள்? மதுவிலக்கு சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துமா? இல்லை மதுவிலக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மாநிலங்களில் நடந்தது போல் கள்ளச் சந்தைகள் அதிகரிக்குமா?

இது குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுடன் பல்துறை சார்ந்த பிஹார்வாசிகள் பகிர்ந்து கொண்ட கருத்து:

பாட்னா மேடைக் கலைஞர்:

வரலாற்றை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இதற்கு முன்னர் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பல மாநிலங்களிலும் ஊழலும், கள்ளச் சந்தையில் மது விற்பனையும் அதிகரித்துள்ளது எனக் கூறுகிறார் பாட்னாவின் பிரபல மேடைக் கலைஞர் ஜெய் பிரகாஷ்.

மதுபான விற்பனையாளர்:

மாநில மக்களை குடியிலிருந்து மீட்க மதுவிலக்கு ஒரு நிரந்தர தீர்வல்ல. குட்கா, பான் மசாலா போன்ற பொருட்களுக்கும் பல்வேறு மாநிலங்களும் தடை விதித்துள்ளன. ஆனாலும் பான் மசாலா பொருட்கள் இன்னும் விற்பனையாகியே வருகின்றன. மதுவிலக்கு வந்தாலும் இதே நிலைதான் ஏற்படும். மதுவிலக்குக்கு பதிலாக சட்டவிரோத மது விற்பனையை அரசு கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும். மதுவிலக்கு முடிவு என்னைப் போன்ற மதுபான சில்லறை விற்பனையாளர்கள் 5000 பேரையும் கடும் பாதிப்புக்குள்ளாக்கும். எங்கள் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர். இதையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் மதுபான சில்லறை விற்பனையாளர் மகேந்திர சிங்.

நிதிஷ் குமாருக்கு ஆதரவு:

அதேவேளையில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், தனியார் துறைகளில் வேலைக்குச் செல்பவர்கள் நிதிஷ் குமார் அறிவிப்பைப் பாராட்டியுள்ளதோடு வெகுவாக வரவேற்கின்றனர்.

சஞ்சய் குமார் என்ற மருத்துவர் கூறும்போது, "பிஹாரில் பெரும்பாலான மக்கள் குடிக்கு அடிமையாகியுள்ளனர். ஆல்கஹால் அவர்களது ரத்தத்தில் கலந்துள்ளது. மது விற்பனையை அரசு கண்காணிக்க வேண்டும். மதுக்கடைகள் புதிதாக திறக்கப்படுவதை நிறுத்த வேண்டும்" என்றார்.

மதுவிலக்கு அறிவிப்புக்கு பிஹார் மாநிலப் பெண்கள் பலரும் நிதிஷ் குமாருக்கு தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பிஹார் மாநில சப்ரா மாவட்டம் நயா காவோன் கிராமத்து பெண்கள், "முதல்வர் நிதிஷ் குமாருக்கு நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்" எனக் கூறியுள்ளார்கள். கடந்த செப்டம்பர் 5-ம் தேதியன்று நயா காவோன் கிராமம் ஊடக கவனத்தைப் பெற்றது. காரணம், ஊரில் இருந்த சாராயக் கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள் சாராய வியாபாரிகளை ஊரை விட்டே காலி செய்தனர்.

இந்நிலையில் மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளதால் நயா காவோன் பெண்கள் நிதிஷுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

சோபேபூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா தேவி கூறும்போது, "மதுவிலக்கை அமல்படுத்துவது பள்ளிக்கூடம் திறப்பது; மருத்துவமனை கட்டுவதைவிட மிகவும் அவசியமானது. மதுவால் இங்கு ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து கொண்டிருக்கிறது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x