Last Updated : 01 Apr, 2021 07:27 PM

5  

Published : 01 Apr 2021 07:27 PM
Last Updated : 01 Apr 2021 07:27 PM

230 தொகுதிகள் கிடைக்காவிட்டால் தம் எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடி விடும்: மம்தா பானர்ஜி அச்சம்

புதுடெல்லி

மேற்கு வங்க சட்டப்பேரவையின் 295 தொகுதிகளில் 230 கிடைக்காவிட்டால் தனது எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடிக் கொள்ளும் என முதல்வர் மம்தா பானர்ஜி அச்சம் தெரிவித்துள்ளார். இதை அவர் தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்களிடன் எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக மேற்கு வங்கமாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆள்கிறது. இதன் முதல்வர் மம்தாவிடமிருந்து ஆட்சியை பறிக்க இந்தமுறை பாஜக அதிக தீவிரம் காட்டி வருகிறது.

இன்றுடன் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவுறும் நிலையில் பாஜக மீது முதல்வர் மம்தா ஒரு புதிய புகார் தெரிவித்துள்ளார். இதில் அவர், தம் கட்சி குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தால் தனது எம்எல்ஏக்களை பாஜக வேட்டையாடி விடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று சிங்கூர் பிரச்சார மேடையில் பேசிய முதல்வர் மம்தா கூறும்போது, ‘‘நான் மட்டும் இந்த தேர்தலில் வென்றால் ஆட்சி அமைத்து விட முடியாது. எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் 291 தொகுதிகளிலும் இந்த வெற்றியை பெற வேண்டும்.

மீதம் உள்ள தொகுதிகளில் எங்கள் நண்பர்கள் டார்ஜிலிங் மலைப்பகுதியின் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இவை அனைத்திலும் நம் கட்சி குறைந்தது 225 முதல் 230 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

இல்லையென்றால், சில துரோகிகளின் உதவியுடன் ஐந்து கோடி ரூபாய் வரை அளித்து பாஜக வேட்டையாடி விடும். எனவே, பொதுமக்கள் எங்களுக்கு அதிக அளவில் வாக்களிக்க முன்வர வேண்டும்.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஏற்கனவே உருவாகி வரும் அச்சத்தை தான் முதல்வர் மம்தா வெளிப்படுத்தி இருப்பதாகக் கருதப்படுகிறது. இதற்கு கர்நாடகாவில் வென்ற மதசார்பற்ற ஜனதா தளக்கூட்டணியின் ஆட்சியை வேட்டையாடி கவிழ்த்ததாகவும் உதாரணம் காட்டுகின்றனர்.

இதை குறிப்பிட்ட முதல்வர் மம்தா கடந்த மார்ச் 28 இல் அனைத்து எதிர்கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதியின் அகிலேஷ்சிங் யாதவ் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பெற்றுள்ளனர்.

இதன் மீதான மூன்று பக்கக் கடிதத்தில் மம்தா, ‘பல்வேறு கேள்விகளுக்கு உரியதான அளவில்லா தொடர்புகளின் மூலம் பாஜகவிற்கு மிக அதிகமான பலம் கிடைத்துள்ளன. இவற்றை வைத்து அக்கட்சி பாஜக அல்லாமல் அமையும் அரசுகளின் எம்எல்ஏக்களை கவிழ்க்கிறது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் மேற்கு வங்க மாநில பாஜகவின் தலைமை செய்தி தொடர்பாளரான ஷமிக் பட்டாச்சார்யா கூறுகையில், ‘முதலில் அவர் வெளியாட்கள் வாக்குகளை பறிப்பதாகக் குற்றம் சுமத்தினார்.

பிறகு இந்த தேர்தலில் மத்திய தேர்தல் ஆணையம் மர்மான முறையில் செயல்படுவதாகவும் புகார் கூறி இருந்தார். இந்த புகார்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மாறி தற்போது குதிரைப்பேரங்களில் வந்து நின்றுள்ளது.

இவை அனைத்தும் இந்த தேர்தலில் மம்தாவிற்கு ஏற்படவிருக்கும் தோல்வி பயத்தை காட்டுகிறது. மற்றபடி, அவற்றில் எதிவுமே உண்மை அல்ல.’’ எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்க தேர்தலின் எட்டு கட்ட வாக்குப்பதிவில் இன்னும் ஆறுகட்ட தேர்தல் பாக்கி உள்ளன. இவை அனைத்தின் முடிவுகள் மே 2 -ம் தேதி வெளியாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x