Published : 01 Apr 2021 02:08 PM
Last Updated : 01 Apr 2021 02:08 PM
பிரான்ஸிலிருந்து 3 ரஃபேல் போர் விமானங்கள் நேற்று மாலை குஜராத் மாநிலம் வந்து சேர்ந்தன என்று இந்திய விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிரான்ஸிலிருந்து நேற்று காலை புறப்பட்ட இந்த 3 ரஃபேல் போர் விமானங்களும் இடைநில்லாமல் பறந்தன. ஐக்கிய அரபு அமீரகத்தின் வான்வெளிக்குள் நுழைந்தவுடன், அந்நாட்டு விமானப்படை தரப்பில் வானிலேயே, ரஃபேல் போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து இந்திய விமானப்படை ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், "பிரான்ஸிலிரு்து 4-வது கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய மண்ணில் வந்து சேர்ந்தன. இடைநில்லாமல் பறந்த இந்த 3 விமானங்களுக்கும் நடுவானில் ஐக்கிய அரபு அமீரகம் விமானப்படை எரிபொருள் நிரப்பியது. இதற்கு நன்றி தெரிவிக்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-வது கட்டமாக 3 ரஃபேல் போர் விமானங்கள் வந்துள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ஏப்ரல் நடுப்பகுதியில் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வர உள்ளன. அதுவரை ஹசிமரா விமானப் படைத்தளத்தில் நிறுத்தப்பட உள்ளன'' என்று விமானப்படை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது
பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு பிரான்ஸ் அரசுடன் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தின்படி முதல் கட்டமாக 10 ரஃபேல் விமானங்கள் தயாராக இருந்த நிலையில், அதில் 5 விமானங்கள் 2020-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதி இந்தியா வந்தன. அவை முறைப்படி இந்திய விமானப் படையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி இணைக்கப்பட்டன.
2-வது கட்டத்தில் 3 ரஃபேல் போர் விமானங்கள் 2020 நவம்பர் 3-ம் தேதி வந்தன. 3-வது கட்டத்தில் 3 போர் விமானங்கள் 2021, ஜனவரி 27-ம் தேதி வந்தன.
இந்த ரஃபேல் போர் விமானம் அதிநவீனத்துடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் ரஃபேல் விமானத்தில் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT