Published : 01 Apr 2021 01:02 PM
Last Updated : 01 Apr 2021 01:02 PM
பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி ஏற்கெனவே கொள்ளையடித்துவிட்டது மத்திய அரசு. அடுத்ததாக சிறுசேமிப்பு வட்டியைக் குறைத்து நடுத்தர மக்களின் சேமிப்பைக் கொள்ளையடிக்கப் போகிறது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசைச் சாடியுள்ளார்.
சேமிப்புத் திட்டங்கள், டெபாசிட்கள் போன்றவற்றுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய அரசு வட்டியை மாற்றி வருகிறது. அந்த வகையில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்பு பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை 1.1 சதவீதம் வரை குறைத்து மத்திய நிதியமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது.
நடுத்தரக் குடும்பங்கள், ஏழைகள் பெரும்பாலும் இதுபோன்ற சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, தங்களின் எதிர்கால நலன்களுக்காகச் சேர்த்து வைத்துள்ளனர். அவர்களின் முதலீட்டின் மீது விழுந்த அடியாக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிக் குறைப்பு இருந்ததால், பெரும் அதிருப்தி உருவானது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, குறைக்கப்பட்ட சிறுசேமிப்பு வட்டிக்கான அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். 2021, மார்ச் காலாண்டில் இருந்தபடியே வட்டிவீதம் தொடரும் என்றும் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ராகுல் காந்தியும் சாடியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "பெட்ரோல், டீசலில் ஏற்கெனவே கொள்ளையடித்துவிட்டார்கள். விரைவில் தேர்தல் முடிந்தபின், சிறுசேமிப்புகளுக்கான வட்டியைக் குறைத்து, நடுத்தர மக்களின் சேமிப்பிலும் கொள்ளையடிப்பார்கள். மத்திய அரசு சாமானிய மக்களிடம் கொள்ளையடிக்கிறது" என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "பணவீக்கம் 6 சதவீதமாக இருக்கும் நிலையில் அது மேலும் அதிகரிக்கும். அப்படி இருக்கும்போது பாஜக அரசு, வட்டி வீதத்தை 6 சதவீதத்துக்கும் கீழ் குறைத்து, சேமிப்பை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்கத்து மக்களை அடிக்கிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, தான் லாபம் ஈட்டும் நோக்கில் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி வீதத்தைக் குறைத்து நடுத்தர மக்கள் மீது மற்றொரு தாக்குதலை நடத்த முடிவு செய்துள்ளது. ஆனால், இதில் அவர் சிக்கிக்கொண்டபோது, நிதியமைச்சர் வழக்கமாகக் கூறுவதுபோல் கவனிக்காமல் தவறுதலாக நடந்துவிட்டது என வழக்கமான சாக்குகளைக் கூறுகிறார்.
சேமிப்புத் திட்டங்களுக்கு அடுத்த காலாண்டுக்கான வட்டி வீதத்தை அறிவிப்பது என்பது வழக்கமான செயல்முறை. இது மார்ச் 31-ம் தேதி வெளியானதில் எந்தவிதமான கவனக்குறைவும் இல்லை" எனக் கண்டித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT