Published : 31 Mar 2021 06:11 PM
Last Updated : 31 Mar 2021 06:11 PM
பாஜக நடத்தும் தாக்குதலில் இருந்து இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைக் காக்க அனைவரும் ஒன்று சேரவேண்டும் என்று பாஜக ஆளாத மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்டத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் சிபுசோரன், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோருக்கு இந்தக் கடிதத்தை மம்தா அனுப்பியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசின் செயல்களால், பாஜக ஆளாத மாநிலங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதைத் தெரிவித்து இந்தக் கடிதத்தை மம்தா எழுதியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் மம்தா பானர்ஜி கூறியுள்ளதாவது:
''மத்தியில் ஆளும் அரசின் ஜனநாயகத்தின் மீதும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் மீதும் பாஜக தொடர்ந்து நடத்திவரும் தாக்குதலில் இருந்து காக்க நாம் ஒன்றுசேர வேண்டும். எனது கவலைகளைத் தெரிவித்து இந்தக் கடிதத்தை நான் பாஜக ஆளாத மாநிலங்களில் இருக்கும் தலைவர்களுக்கும், உங்களுக்கும் எழுதுகிறேன். நாம் அனைவரும் பாஜகவுக்கு எதிராக ஒன்றுசேர வேண்டும்.
டெல்லியில் மக்களால் ஜனநாயகரீதியாகத் தேர்வு செய்யப்பட்ட அரசின் அதிகாரங்களை முடக்கும் விதத்தில், டெல்லி தேசியத் தலைநகர் அதிகாரத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது உண்மையில் டெல்லியில் ஜனநாயக ரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அனைத்து அதிகாரிகளையும் கபளீகரம் செய்து, அந்த அதிகாரத்தை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் கையில் வழங்கிவிட்டது. டெல்லியின் அறிவிக்கப்படாத நிர்வாக அதிகாரியாகத் துணைநிலை ஆளுநர் மாறிவிட்டார்.
பாஜக ஆட்சி செய்யாத பல மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு தொந்தரவுகளைக் கொடுக்கிறது. அவர்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது. குறிப்பாக மேற்கு வங்க ஆளுநர் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் பாஜகவினர் போல் நடந்து கொள்கிறார்கள். நடுநிலையோடு நடப்பதில்லை.
தங்களுடைய சொந்த இலக்குகளுக்காக மத்தியில் ஆளும் பாஜக அரசு, விசாரணை அமைப்புகளான சிபிஐ, அமலாக்கப் பிரிவு, என்ஐஏ ஆகியவற்றின் மூலம், பாஜக அல்லாத தலைவர்களுக்கும், பல்வேறு அமைப்புகளுக்கும் எதிராகச் செயல்பட வைக்கிறார்கள். குறிப்பாகத் தமிழகம், மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்கும் நிலையில் இரு கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் வீடுகளில் அமலாக்கப் பிரிவு மூலம் சோதனையிட வைக்கிறது. இந்த சோதனை பாஜக அல்லாத தலைவர்களின் வீடுகளில்தான். பாஜக தலைவர்களின் வீடுகளில் நடக்கவில்லை.
மத்தியில் ஆளும் பாஜக அரசு திட்டமிட்டே, பாஜக அல்லாத மாநிலங்களுக்குச் சேர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்கிறது. இதனால், மக்கள் நலனுக்குத் தேவையான நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கலை எதிர்கொள்கிறோம்.
தேசிய மேம்பாட்டுக் கவுன்சில், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், திட்டக்குழு ஆகியவற்றை மோடி அரசு கலைத்துவிட்டு அதிகாரமில்லாத நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கியுள்ளது. மாநில அரசுகள் தங்கள் குறைகள், தேவைகள், கவலைகள் அனைத்தையும் தெரிவித்து வந்த துறைகள் அனைத்தையும் மோடி அரசு செயல்படாமல் வைத்துவிட்டது.
பாஜக ஆளும் மாநிலங்களின் ஆட்சியைக் கலைப்பதற்காக பாஜக ஏராளமான பணத்தைச் செலவிடுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.
மொத்தத்தில் மத்திய-மாநில அரசுகளின் உறவுகள், மாநிலத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, மத்திய அரசு ஆகியவற்றின் உறவுகள் வரலாற்றில் இதைவிட மோசமாகச் சென்றதில்லை. தனிமைப்படுத்தப்பட்டது போல் உணர்கிறார்கள். இவை அனைத்துக்கும் பிரதமரின் சர்வாதிகாரப் போக்குதான் காரணம்''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT