Published : 31 Mar 2021 04:59 PM
Last Updated : 31 Mar 2021 04:59 PM
45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய்கள் இருப்போர், இல்லாதவர்கள் என அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடைமுறைக்கு நாடுமுழுவதும் நாளை அமலுக்கு வருகிறது.
இதை முறைப்படி செயல்படுத்தும் முன்பாக, மத்திய சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் , காணொலி மூலம் மாநில அரசுகள், யூனியன்பிரதேசங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
நாட்டில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இரு தடுப்பூசிகளை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் மருந்தும், சீரம் மருந்து நிறுவனத்துடன் அஸ்ட்ராஜென்கா நிறுவனம் இணைந்து தயாரித்த கோவிஷீல்ட் மருந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் கட்ட தடுப்பூசி முகாம் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. இந்த முகாமில் முன்களப் பணியாளர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது
2-ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமின் இணை நோய்கள் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டோர் மருத்துவரிடம் சான்று பெற்று வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் முகாமில் 45 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் அதாவது இணை நோய்கள் இருப்போர் இல்லாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். இணை நோய்கள் இருப்போர் சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்தது
இந்நிலையில் இந்த செயல்முறை தொடர்பாகத் தேசிய சுகாதார ஆணையம் மற்றும் கரோனா தடுப்பூசிக்கான அதிகாரமிக்க குழுவின் தலைவர் மருத்துவர் ஆர்.எஸ்.சர்மா , மத்திய சுகாதாரத்துறைச் செயலர் ராஜேஷ் பூஷன் ஆகியோர் மாநில சுகாதாரத்துறை செயலர்கள், என்ஹெச்எம் இயக்குநர்கள், தடுப்பூசித் திட்ட அதிகாரிகள் ஆகியோருடன் காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நாடுமுழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நாளை முதல் தொடங்குகிறது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை மாநிலஅரசுகள், யூனியன் பிரதேசங்கள் செய்துள்ளனவா என ஆலோசிக்கப்பட்டது.
மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் எங்கு அதிகமாக இருக்கிறார்களோ அவர்களை அடையாம் கண்டு, அவர்களுக்குத் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி தடுப்பூசி செலுத்த ஆலோசிக்கப்பட்டது.
சுகாதாரப் பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் பிரிவில் பதிவு செய்துள்ளவர்கள், தகுதியானவர்கள் மட்டும் செலுத்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
கரோனா தடுப்பூசி செலுத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு அடிக்கடி சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று மருந்துகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
கரோனா தடுப்பூசி மருந்துகளை அளவுக்கு அதிகமாக இருப்பு வைக்காமல், தேவைக்கு ஏற்ப மட்டும் இருப்பு வைத்து, சீராகப் பயன்படுத்துமாறு மாநில அரசுகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. கரோனா தடுப்பூசி எத்தனை மருத்துகள் இருப்பு இருக்கிறது, எத்தனை மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன, நுகர்வுக்கும், இருப்புக்கும் இருக்கும் இடைவெளி ஆகியவை குறித்து அடிக்கடி மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும்.
கரோனா தடுப்பூசி வீணாகுதல் சதவீதம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வைத்திருக்கும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT