Published : 31 Mar 2021 04:01 PM
Last Updated : 31 Mar 2021 04:01 PM
அசாம் மாநிலம், மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக மாறுவதற்கு பாஜக இனிமேலும் அனுமதிக்காது என்று ஏஐயுடிஎப் கட்சித் தலைவர் பஹ்ருதீன் அஜ்மலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் கடந்த 27-ம் தேதி 47 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் நடந்தது. நாளை நடக்கும் 39 தொகுதிகளுக்கு 2-வது கட்டத் தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 6-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
சமீபத்தில் ஏஐயுடிஎப் கட்சியின் தலைவர் பஹ்ருதீன் அஜ்மல் பேசுகையில், எங்களின் கட்சி (பூட்டு, சாவி சின்னம்) அசாமில் அடுத்த முதல்வர் யார் என்பதைத் தீர்மானிக்கும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு இன்று நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் சிராங் மாவட்டத்தில் உள்ள பிஜ்னி நகரில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''மாநிலத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதைப் பூட்டு சாவி சின்னம்தான் தீர்மானிக்கும் என்று சவால் விட்டுள்ளார்கள். ஆனால், ஆட்சி அமைப்பதை முடிவு செய்வது அவர்கள் கையில் இல்லை. யார் ஆட்சியில் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யும் பூட்டும் சாவியும் அசாம் மக்களிடம்தான் உள்ளது.
அஜ்மலுக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாகக் கூறுகிறேன். அசாம் மாநிலத்தை மீண்டும் ஊடுருவல்காரர்களின் மையமாக மாறுவதற்கு பாஜக அனுமதிக்காது. எங்களுக்கு அடுத்து 5 ஆண்டுகள் கொடுங்கள். அசாம் மாநிலத்துக்குள் சட்டவிரோதமாக ஊடுருவல்காரர்கள் மட்டுமல்ல பறவைகள் கூட வரவிடாமல் பாதுகாப்போம்.
காங்கிரஸ் மூத்த தலைவர் தருண் கோகய், அஜ்மல் என்பவர் யார் என்று கேட்டார். ஆனால், அதே கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அசாம் மாநிலத்தின் அடையாளம் அஜ்மல் என்றார். ஆனால், அசாமின் அடையாளமாக மாறுவதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
அசாம் அடையாளங்களாக வைஷ்ண துறவிகள் ஸ்ரீமந்தா சங்கரதேவா, பாரத ரத்னா கோபிநாத் பர்தோலி, பூபென் ஹசாரிகா ஆகியோர் இருக்கும்போது, காங்கிரஸ் கட்சியும், அஜ்மலும் அடையாளத்தை மாற்ற முயன்றால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
பாஜக அரசு இரட்டை இன்ஜின் பொருத்தப்பட்டது. மத்திய அரசின் ஆதரவும், மாநிலத்தில் பாஜக அரசும் இருக்கும். முதல்வர் சர்பானந்த சோனாவால் கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தை அமைதியாக வழிநடத்தியுள்ளார். எந்தப் போராட்டங்களும் நடக்கவிடாமல் வளர்ச்சிப் பாதைக்கு மாநிலத்தைக் கொண்டு சென்றுள்ளார்.
பாஜக தலைவராக நான் இருந்தபோது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தபோது, அசாம் மாநிலத்தை வன்முறையில்லாத, போராட்டம் இல்லாத மாநிலமாக மாற்றி, வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வேன் எனத் தெரிவித்தேன். எங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். அடுத்த 5 ஆண்டுகள் வாய்ப்பு கொடுத்தால், ஊடுருவல்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT