Published : 23 Nov 2015 06:02 PM
Last Updated : 23 Nov 2015 06:02 PM
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வரும் பெண்களுக்கு ஆடை நெறிமுறைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறிப்பாக, அரைக்கால் மற்றும் முழுக்கைகள் தெரியும்படியான உடைகள் அணிந்து உள்ளே வரும் வெளிநாட்டவர்களை கட்டுப்படுத்த வேண்டி கோயில் நிர்வாகம் இன்று (திங்கள்கிழமை) இந்த முடிவு எடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் காசி எனும் வாரணாசியில் அமைந்திருப்பது காசி விஸ்வநாதர் எனப்படும் பழம்பெரும் சிவன் கோயில். இந்துக்களின் மிக முக்கிய புண்ணியதலமான இங்கு வெளிநாட்டவர்களும் பரவலாக வருவது உண்டு. இதில் பெண்கள் தங்கள் நாடுகளில் கை, கால்கள் முழுமையாகத் தெரியும்படியான ஆடைகளை அதிகமாக அணிந்து வருவது வழக்கமாக உள்ளது. இதனால், கோயிலில் நிலவும் பக்திச்சூழலுக்கு களங்கம் வருவதாகப் புகார்கள் பல வருடங்களாக எழுந்து வருகின்றன.
இதற்காக இன்று வாரணாசி பகுதியின் மண்டல ஆணையர் நித்தின் ரமேஷ் கோகன் மற்றும் அக்கோயிலின் அறக்கட்டளை உறுப்பினர்கள் இடையே ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில், கோயிலுக்கு வரும் பெண்கள் சேலை அணிந்து வர வேண்டும் என புதிய ஆடை நெறிமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிளம்பும் சர்ச்சைகளை மனதில் கொண்டு இந்த ஆடை நெறிமுறைகள் கட்டாயப்படுத்தப்படவில்லை.
இது குறித்து ‘தி இந்து’விடம் காசி விஸ்வநாதர் கோயிலின் நிர்வாக அதிகாரியான பி.என்.துவேதி கூறுகையில், ''கோயிலின் கண்ணியம் காக்கும் பொருட்டு இந்த ஆடை நெறிமுறைகள் அறிமுகம் செய்துள்ளோம். இதன் முக்கியத்துவத்தை கோயிலுக்குள் நுழைபவர்களிடம் பணிவாக எடுத்துக் கூறி புரிய வைக்கப்படும். ஆனால், உடல் மறைக்கும்படியான உடைகளை அணிந்து வருபவர்களுக்கு கர்ப்பகிரகம் வரை சென்று சிவனை தரிசிக்க எந்த தடையும் இல்லை.
இங்கு வரும் பக்தர்கள் கோயிலுக்கு காணிக்கையாக சேலைகளும் அளிப்பது உண்டு. இவற்றை எங்களிடம் பெற்று அணியும் பக்தர்கள் வேண்டுமானால் திரும்பும் போது திருப்பித் தர வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை'' என தெரிவித்தார்.
பனாரஸ் எனவும் அழைக்கப்படும் பழம்பெரும் நகரமான வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் அன்றாடம் வரும் பக்தர்கள் எண்ணிக்கை சுமார் 3000. இவர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களும் அடக்கம். இதனுள், பாத அணிகளுடன் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது கோயிலுக்கு வரும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு காவலர்களுக்கும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பெண்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆடை நெறிமுறை, விரைவில் ஆண்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கான இந்த ஆடை நெறிமுறைகள் ஏற்கெனவே கேரளாவின் சபரிமலை, ஆந்திராவின் திருப்பதி வெங்கடாசலபதி மற்றும் தமிழகத்தின் சுசீந்திரம் உட்படப் பல கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT