Published : 06 Nov 2015 10:54 AM
Last Updated : 06 Nov 2015 10:54 AM
நிழல் உலக தாதா சோட்டா ராஜன் நேற்று காலை டெல்லி அழைத்து வரப்பட்டார். குண்டு துளைக்காத காரில், ஏ.கே 47 துப்பாக்கிகளுடன் மத்திய பாதுகாப்பு படையினர் அணிவகுக்க அவர் சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் சிபிஐ போலீஸார் தீவிர விசரணை மேற்கொண்டனர்.
20 கொலை உட்பட 80-க்கும் மேற்பட்ட குற்றச் செயல்களில் தொடர்புடைய சோட்டா ராஜன் எனும் ராஜேந்திர சதாஷிவ் நிக்கல்ஜி பல ஆண்டுகளாக போலீஸாரால் தேடப்பட்டு வந்தார்.
55 வயதாகும் இவர் கடந்த 1995-ம் ஆண்டு சர்வதேச காவல்துறையான இன்டர்போல் போலீஸாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதனால், ஆஸ்திரேலியாவில் தலைமறைவாக இருந்த ராஜன், கடந்த அக்டோபர் 25-ம் தேதி அங்கிருந்து இந்தோனேசியாவின் சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு வந்திறங்கினார். அப்போது அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர்களால் ஒப்படைக்கப்பட்ட ராஜனுடன் சிபிஐ மற்றும் மும்பை போலீஸார், நேற்று முன்தினம் மாலை பாலியில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். இந்த விமானம் நேற்று காலை 5 மணியளவில் டெல்லியின் பாலம் விமான நிலையம் வந்திறங்கியது. இங்கிருந்து பாலிவுட் படக் காட்சிகளையும் மிஞ்சும் வகையில் பலத்த பாதுகாப்புடன் சிபிஐ தலைமை அலுவலகம் கொண்டு செல்லப்பட்டார் ராஜன். இவருக்கு நிழல் உலகின் முக்கிய தாதாவான தாவூத் இப்ராஹிம் ஆட்களால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதே இதற்கு காரணம்.
சோட்டா ராஜனின் வரவுக்காக டெல்லி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பத்திரிகையாளர்களுடன் தாவூதின் ஆட்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களை ஏமாற்றும் வகையில் இருவேறு பாதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன. டெல்லியின் லோதி சாலையில், மத்திய அரசு அலுவலக வளாகத்தில் உள்ள சிபிஐ தலைமையகம் அல்லது ஐடிஓ பகுதியில் உள்ள டெல்லி சிறப்பு போலீஸ் தலைமையகம் ஆகிய இரு இடங்களுக்கு ராஜனை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. இதில் இறுதி செய்யப்பட்ட இடம் கடைசி வரை ரகசியமாக இருந்தது. இவ்விரு இடங்களுக்கும் செல்லும் பாதைகளிலும் டெல்லியின் சிறப்பு படையான ‘ஸ்வாட்’, மத்திய பாதுகாப்பு படைகளான சிஐஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் ஆகியவற்றின் வீரர்கள் வழிநெடுக அணிவகுத்திருந்தனர். இதையும் மீறி தாவூதின் ஆட்களிடம் பிடிபடாமல் இருக்க ராஜனை போல் தோற்றம் கொண்ட ஒருவரை ‘டம்மி’யாகவும் பயன்படுத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது.
முன்னதாக டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய ராஜன் தனது தாய் மண்ணை கண்டு உணர்ச்சிவசப்பட்டார். கலங்கிய கண்களுடன் நிலத்தை தொட்டு வணங்கினார். அவரது கைகளில் விலங்கு போடப்பட்டிருந்தது. அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களின் கேள்விகளில் இருந்து சோட்டா ராஜனை தப்ப வைத்த சிபிஐ அதிகாரிகள், அவருக்கு விஐபி-க்கான பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றனர். குண்டு துளைக்காத காரில் ஏ.கே.47 உள்ளிட்ட இயந்திர துப்பாக்கிகள் ஏந்திய டெல்லி போலீஸ் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் நிரம்பிய சுமார் 15 வாகனங்களும் சோட்டா ராஜனின் பாதுகாப்பில் முன்னும் பின்னுமாக தொடர்ந்தன.
சுமார் 10 கி.மீ. தொலைவை கார் 25 நிமிடங்களில் கடந்து சிபிஐ தலைமையகம் அடைந்த போதும் அதில் சோட்டா ராஜன் இருக்கிறாரா என்பது சந்தேகமாகவே இருந்தது. ஏனெனில் அதேபோன்ற பாதுகாப்புடன் மற்றொரு கார் மற்றொரு பாதையிலும் சென்றதே இதற்கு காரணம். இந்த அளவுக்கு பலத்த பாதுகாப்பு சர்வதேச குற்றவாளி ஒருவருக்கு எந்த நாட்டிலும் அளிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது. இதில் குறிப்பாக சோட்டாராஜனின் பாதுகாப்பு பணியில் டெல்லி காவல்துறையின் சிறந்த அதிகாரிகளாக கருதப்படும் துணை ஆணையர் சஞ்சீவ் யாதவ், ஆய்வாளர்கள் எல்.எம்.நாகி, ஹிருதய் பூஷண் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சிறப்பு உத்தரவின் பேரில் சோட்டா ராஜனின் பாதுகாப்பு பணியில் இவர்கள் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள், பிஹாரின் தர்பங்காவில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத கும்பலை பிடித்தவர்கள் ஆவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT