Last Updated : 30 Mar, 2021 05:02 PM

3  

Published : 30 Mar 2021 05:02 PM
Last Updated : 30 Mar 2021 05:02 PM

கன்னியாஸ்திரிகளை கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது? -பாஜகவுக்கு பிரியங்கா காந்தி கேள்வி

கருநாகப்பள்ளி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செ்யலாளர் பிரியங்கா காந்தி பேசிய காட்சி : படம் ஏஎன்ஐ

கருநாகப்பள்ளி,

கன்னியாஸ்திரிகளை கேள்வி கேட்கவும், அவர்களின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யவும் பாஜகவின் இளைஞர் அமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

உ.பி.யில் ஜான்ஸி நகரில் கேரளாவைச் சேர்ந்த இரு கன்னியாஸ்திரிகள் ரயிலில் வந்தபோது, அவர்களை ரயிலில் இருந்த ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த சிலர் கீழே இறக்கிவிட்டனர். கட்டாய மதமாற்றத்துக்காக இரு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி போலீஸில் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள் புகார் செய்தனர். இந்த புகாரையடுத்து, விசாரணை நடத்திய போலீஸார் கன்னியாஸ்திரிகள் மீது எந்தத் தவறும் இல்லை என அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரத்தில் கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டார்கள் என்று முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், கன்னியாஸ்திரிகளை யாரும் தாக்கவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், கேரளாவில் 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காகக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சென்றுள்ளார். கொல்லம் மாவட்டத்தில் கருநாகப்பள்ளியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஊர்வலம் சென்ற பிரியங்கா காந்தி, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:


இது தேர்தல் நேரம், அதனால்தான் கன்னியாஸ்திரிகள் துன்புறுத்தப்பட்டு ஜான்ஸி நகரில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவத்தில், தங்களின் சொந்தக்கட்சியினர் மீது குற்றச்சாட்டு எழுந்தவுடன், மத்திய அமைச்சர் தலையிட்டு, அவ்வாறு ஏதும் நடக்கவில்லை, கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கிறார்.

ஆனால், தேர்தல் காலமாக இல்லாவிட்டால், கன்னியாஸ்திரிகளை அவமானப்படுத்திய சம்பவத்தை ஆதரித்துப் பேசுவார்கள். நான் கேட்கிறேன், ரயிலில் பெண்களையும், கன்னியாஸ்திரிகளையும் கேள்வி கேட்பதற்கு பாஜக இளைஞர் அமைப்புக்கு யார் அதிகாரம் அளித்தது. கன்னியாஸ்திரிகள் மற்றும் அவருடன் வந்த இரு பெண்களின் பயண ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கு அவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது.

அவர்களின் மதத்தைப் பற்றிக் கேள்வி கேட்க யார் அனுமதித்தது. ரயிலில் பெண்கள் துன்புறுத்தல் இல்லாமல் செல்லமுடியாதா, அப்படிப்பட்ட தேசத்தில்தான் வாழ்கிறோமோ. குண்டர்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் அளிக்கப் பெண்கள் கடமைப்பட்டவர்களா

நான் அந்த கன்னியாஸ்திரிகளிடம் பேசினேன், அந்த சம்பவம் பற்றி பேசிய இரு கன்னியாஸ்திரிகளும் என்னிடம் மிகுந்த வருத்தப்பட்டனர். ரயிலில் இருந்து இரு கன்னியாஸ்திரிகளையும் வலுக்கட்டாயமாக இறக்கிவிடப்பட்ட போது அவர்களை பாதுகாக்க அங்கு யாரும் வரவில்லை, யாரும் தடுக்கவில்லை.

ஆனால், பெண்களைப் பாதுகாப்போம் என்று பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் போலியாகப் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால் உண்மையில் பெண்கள் மீது அவர்களுக்கு மதிப்பில்லை.

தேர்தல் அல்லாத நேரம் தவிர்த்து, பெண்கள் என்ன அணிய வேண்டும், பெண்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும், எங்குப் போக வேண்டும், எப்படிப் போக வேண்டும் என்பதிலேயே நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

பாஜகவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் பற்றிப் பேசுகிறார்கள். பாஜக அமைச்சர் ஒருவர், பெண்கள் ஒரு மாவட்டத்தைவிட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால்கூட அனுமதி வாங்க வேண்டும், போலீஸில் பதிவு செய்ய வேண்டும் அதற்குச் சட்டம் தேவை என்று பேசுகிறார்.

அரசியல்வாதிகள் தங்களை அதிகாரம் செய்யும் நிலையைப் பெண்கள் அனுமதிக்கக்கூடாது. பெண் எனும் அடையாளத்துக்கு பாஜக அங்கீகாரம் அளிப்பதில்லை.

இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x