Published : 30 Mar 2021 04:02 PM
Last Updated : 30 Mar 2021 04:02 PM
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரின் தாய் குல்ஷன் நசீரின் விண்ணப்பத்தையும் போஸ்போர்ட் அலுவலகம் நிராகரித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் முதல்வருமான முப்தி முகமது சயீத்தின் மனைவி குல்ஷன் நசீர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி புதிய பாஸ்போர்ட் கேட்டு மெகபூபா முப்தி ஸ்ரீநகர் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், போலீஸார் விசாரணை அறிக்கையில், மெகபூபா முப்தி தேசத்தின் நலனுக்கு எதிராகச் செயல்படலாம், தேசபாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கலாம், ஆதலால், மெகபூபா முப்திக்கு பாஸ்போர்ட் வழங்க பரிந்துரைக்க முடியாது என்று தெரிவித்தனர். இதன் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரியும் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், மெகபூபா முப்தியின் தாயார் குல்ஷன் நசீர் தாக்கல் செய்திருந்த பாஸ்போர்ட் விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் போலீஸாரின் சிஐடி பிரிவு, மெகபூபா முப்தியின் தாயார் குல்ஷன் நசீருக்கு உரிய நற்சான்றிதழ்களை வழங்காததால், அவரின் பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீநகர் பாஸ்போர்ட் அதிகார மெகபூபா முப்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாஸ்போர்ட் சட்டத்தின்படி, பாஸ்போர்டுக்கு விண்ணப்பிப்பவர் இந்தியாவுக்கு வெளியே சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவார், இந்தியாவின் இறையாண்மைக்கு மாறாக செயல்படுவார், ஒற்றுமைக்கு விரோதமாக நடப்பார், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என போலீஸார் கருதினால், அவருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டாம் என்று பாஸ்போர்ட் அலுவலருக்கு பரிந்துரைக்கும்.
ஆனால் முன்னாள் முதல்வர் முப்தி முகமது சயீத் உயிரிழந்தநிலையில் அவரின் மனைவி குல்ஷன் நசீர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. அவர் மீது எந்த குற்றச்சாட்டும், கிரமினல் விசாரணையும், சம்மன் நிலுவையோ என எதுவுமே இல்லை. இந்நிலையில் குல்ஷன் நசீருக்கும் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிடிபி கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் " 70 வயதுக்கு மேலான எனது தாய் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பார் எனக் கருதி, அவரின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர், அவர் பாஸ்போர்ட்பெறும் தகுதியற்றவர். மத்திய அரசுக்கு நான் கட்டுப்பட்டு நடக்காததால், என்னை துன்புறுத்தி, தண்டிக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்.
இனிமேல், மெகபூபா முப்தி தனக்கும், தன்னுடைய தாயாருக்கும் பாஸ்போர்ட் கேட்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்குத்தான் விண்ணப்பிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT