Last Updated : 30 Mar, 2021 03:14 AM

3  

Published : 30 Mar 2021 03:14 AM
Last Updated : 30 Mar 2021 03:14 AM

நாட்டின் 30 நதிகள் இணைப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்சினைக்கு முடிவு: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தொடங்கிய திட்டத்தை விரைவுபடுத்தும் பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி

நாட்டின் 30 நதிகள் இணைப்பு திட்டத்தால் தண்ணீர் பிரச்சி னைக்கு முடிவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, முன்னாள் பிரதமர் வாஜ்பாயால் துவக்கப்பட்ட நதிகள் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி அரசு விரைவுபடுத்துகிறது.

பாஜக தலைமையில் மீண்டும் 2014-ல் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் பிரதமராக மோடி பதவி ஏற்றார். நதிகள் இணைக்கும் திட்டங்களை மீண்டும் கையில் எடுத்தவர், ‘ஜல் சக்தி’ எனும் பெயரில் நீர்வளத் துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கினார். இந்த அமைச்சகம் சார்பில் நாடு முழுவதிலும் நிறுத்தி வைக்கப்பட்ட நதிகள் இணைக்கும் 30 திட் டங்கள் புத்துயிர் பெற்றன. இந்த நதிகள், 16 தீபகற்பப் பகுதியிலும், 14 இமாலய பிராந்தியங்களிலும் ஓடுகின்றன.

இதன்மூலம், நாட்டின் தண்ணீர் பிரச்சினை தீரும் என மத்திய அரசு கருதுகிறது. இதற்கு உதாரணமாக, உத்தரபிரதேசத்தின் புந்தேல்கண்டில் ஓடும் கேன், பேத்வா நதிகள் இணைப்பு சுட்டிக் காட்டப்படுகிறது. இதன் பலனை கடந்த வாரம் ‘கேச் தி ரெய்ன்’ என்ற பெயரிலான மழை நீர் சேமிப்பு திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடியும் நினைவுகூர்ந்தார்.

வறட்சி முடிவுக்கு வரும்

இது குறித்து காணொலியில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மத்திய ஜல் சக்தித்துறையின் சார்பில் கேன், பேத்வா நதிகள்இணைப்பு திட்டம் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதன் மூலம், மத்தியப்பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் உள்ள புந்தேல்கண்டின் வறட்சி முடிவிற்கு வரும். 21-ம் நூற்றாண்டில் நீர்வளம் நம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டில் முக்கிய அங்கமாக இருக்கும். இதனால், நாம் தற் போதைய பிரச்சனைகளை தீர்ப் பதுடன் வரும் காலங்களிலும் பிரச்சினைகள் வராமல் திட்டமிட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

இமயமலையில் உருவாகி கங்கை, சிந்து சமவெளியில் பல ஆறுகள் உருண்டோடுகின்றன. இவற்றில் பலவும் வருடத்தின் 365 நாட்களும் நீர் நிரம்பி வளமையாக உள்ளன. மழைக்காலங்களில் இவற்றின் அணைகளிலிருந்து அதிக அளவிலான நீர் திறந்துவிடப்பட்டு கடலில் கலந்து வீணாகிறது. இந்தவகையில் உத்தரபிரதேசத்தின் புந்தேல் கண்டின் லலித்பூரின் பேத்வா நதியின் ராஜ்காட், மாதா டீலா எனும் இரண்டு அணைகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் கன அடிகளுக்கும் அதிகமான நீர் திறந்து விடப்படுகிறது. இவையும் கங்கையில் இணைந்து ஓடி கடலில் கலந்து வீணாகி வருகின்றன.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் லலித்பூரின் ஆட்சி யரும் கரூரை சேர்ந்த தமிழருமான அண்ணாவி தினேஷ்குமார் ஐஏஎஸ் கூறும்போது, ‘புந்தேல்கண்டின் நிலப் பகுதி கடினப் பாறைகள் நிறைந்தது. இதனால்,இங்கு பெய்யும் மழையினாலும், ஓடும் நதிகளாலும் நிலத்தடி நீர் உயர்வதில்லை. இவை பாறைகளுக்கு இடையே உள்ள மிகச்சில பிளவுப் பகுதிகளில் மட்டும் தங்குகின்றன.

இங்கு ஓடும் முக்கிய ஆறுகளான கேன், பேத்வா இணைப்பதால் புந்தேல்கண்டில் உள்ள ஆயிரக்கணக்கான குளங்கள் நிரம்பி தண்ணீர் பிரச்சினை தீரும்வாய்ப்புகள் உள்ளன. இக்குளங்கள், கி.பி 9 முதல் 13-ம் நூற்றாண்டு வரையில் ஆண்ட சந்தேளர்களின் ஆட்சியில் மழைநீரை சேமிக்க வெட்டப்பட்டவை’ எனத் தெரி வித்தார்.

நாட்டின் நதிகளை இணைப்ப தால் கிடைக்கும் பலனை 1970-ல் அமைச்சராக இருந்த அணை வடிவமைப்பாளரான டாக்டர் கே.எல்.ராவ் முதலில் கண்டுபிடித்தார். இவரது கருத்தைபாஜக தலைமையிலான தேஜமுவின் முதல் பிரதமரான அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆதரித்தார். வாஜ்பாய் ஆட்சியில் தான் முதன்முறையாக நதிகள் இணைக்கும் திட்டம் துவங்கியது. இதற்காக, நாட்டின் பல பகுதிகளில் ஓடும் நதிகளை இணைக்க நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இதையடுத்தது காங்கிரஸ் தலைமையில் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் நதிகள் இணைக்கும் திட்டத்தில் அரசு அதிக ஆர்வம் காட்டவில்லை என்ற புகார் இருந்தது. இதற்கு நதிகள் இணைப்பால் சுற்றுச்சூழல் பாதிப்பும், சிறிதும் எதிர்பார்க்காத இயற்கை விளைவுகள் உருவாகும் என கருதப்பட்டதும் காரணம். இதனால், நதிகள் இணைக்கும் திட்டத்தில் பலசுணக்கங்கள் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x