Published : 29 Mar 2021 04:45 PM
Last Updated : 29 Mar 2021 04:45 PM
எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி என திரை உலகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழக அரசியலில் கோலோச்சியதைப் பார்த்ததன் தாக்கம், கேரளாவிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
கேரள அரசியலில் நடிகர்கள் களமிறங்குவது விரல் விட்டு எண்ணும் வகையிலேயே இருந்தது. எப்போதும் இல்லாத வகையில் இந்தத் தேர்தலில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.
பாஜகவைச் சேர்ந்தவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சுரேஷ் கோபி திருச்சூர் தொகுதியில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். இடதுசாரிகள் சார்பில் பத்தனாபுரம் தொகுதியில் நடிகர் கே.பி.கணேஷ் குமார், கொல்லம் தொகுதியில் நடிகர் முகேஷ் ஆகியோரும் களமிறங்கியுள்ளனர்.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட சுரேஷ் கோபி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்கிறார்.
கொல்லம் தொகுதியில் இடதுசாரிகள் சார்பில் எம்எல்ஏவாக இருக்கும் நடிகர் முகேஷ் 2-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் ஜி. கிருஷ்ணகுமார், பாலுசேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மஜன் போலாகட்டி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
பாலா தொகுதி எம்எல்ஏ மாணி சி.கப்பன், தற்போது காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார். தனக்கு இடதுசாரிகள் கூட்டணி சீட் தர மறுத்துவிட்டதால், மாணி காங்கிரஸ் தலைவர் ஜோஸ் கே.மாணியை எதிர்த்து பாலா தொகுதியில் கப்பன் போட்டியிடுகிறார்.
கப்பன் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 12க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இவர் தயாரித்த 'மன்னர் மத்தாய் ஸ்பீக்கிங்' என்ற முகேஷ் நடித்த திரைப்படம் கேரளாவில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.
இவர்கள் தவிர பாடகர் தலீமா ஜோஜோ இடதுசாரிகள் சார்பில் அரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் ஷானிமோல் உஸ்மான் போட்டியிடுகிறார்.
தொலைக்காட்சி நடிகை பிரியங்கா அனூப், எந்தக் கட்சியிலும் சேராமல் அரூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்குகிறார். சின்னத்திரையில் பிரபலமான நடிகர் விவேக் கோபன், பாஜக சார்பில் சாவரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
கேரளாவில் தற்போது தேர்தலில் போட்டியிடும் திரை நட்சத்திரங்களுக்கு முன்பாகவே சிலர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர், ஜொலிக்காமல் மறைந்தும் விட்டனர்.
அதில் குறிப்பாக மறைந்த நடிகர் முரளி 1999-ம் ஆண்டு ஆலப்புழா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
2011-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்ட நடிகர் இன்னோசன்ட் வெற்றி பெற்றார். ஆனால், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட இன்னோசன்ட் தோல்வி அடைந்தார்.
இது தவிர தேசிய விருது வென்ற 'செம்மீன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் ராமு காரியத், 1964-ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நத்திகா தொகுதியில் எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸ் கட்சிக்காக நடிகர் ஜெகதீஷ், தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் பிஷாரோட் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மூத்த நடிகர் தேவன், தான் 17 ஆண்டுகளாக நடத்தி வந்த கேரள மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT