Published : 29 Mar 2021 03:44 PM
Last Updated : 29 Mar 2021 03:44 PM
மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டரின் தாய் உயிரிழந்ததற்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பற்றிப் பேசும் அமித் ஷா, பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஹாத்ரஸில் இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டபோது ஏன் மவுனமாக இருந்தார் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மாதம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள நிம்தா பகுதியில் பாஜக தொண்டர் ஒருவரின் வயதான தாய் மீது திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், இதை திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்தது.
இந்நிலையில் காயமடைந்திருந்த பாஜக தொண்டரின் தாய் இன்று உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பாஜக தொண்டரின் தாய் மறைவுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "மேற்கு வங்கத்தின் மகள் ஷோவா மஜும்தார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். திரிணமூல் காங்கிரஸ் குண்டர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் மஜும்தார் காயமடைந்தார். இந்தக் குடும்பத்தாரின் வலியும், வேதனையும் மம்தாவை நீண்ட காலத்துக்கு பாதிக்கும். மேற்கு வங்கத்தில் வன்முறையில்லாச் சூழலுக்காக பாஜக போராடும். எங்களுடைய சகோதரிகள், தாய்மார்களுக்குப் பாதுகாப்பான இடமாக மாற்றப் போராடுவோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நந்திகிராமில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், "சகோதரி மஜும்தார் எவ்வாறு இறந்தார் என எனக்குத் தெரியாது. நாங்கள் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு ஆதரவு தெரிவிப்பதில்லை. எங்களுடைய சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் எதிராக நடக்கும் வன்முறையை ஆதரிக்கமாட்டோம்.
ஆனால், இந்த விஷயத்தை பாஜக அரசியலாக்குகிறது. மஜும்தார் இறந்தது குறித்து அமித் ஷா இரங்கல் தெரிவித்து கருத்துத் தெரிவிக்கிறார். ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு, குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் எரிக்கப்பட்டபோது அமித் ஷா ஏன் மவுனமாக இருந்தார்?
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது, கடந்த சில நாட்களாக திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் பல இடங்களில் கொல்லப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT