Published : 28 Mar 2021 07:58 PM
Last Updated : 28 Mar 2021 07:58 PM
மேற்கு வங்கத்தில் நடந்த முதல் கட்டத் தேர்தலில் 30 தொகுதிகளுக்கு 26 இடங்களை பாஜக கைப்பற்றுமா என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பில் தெரியும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, அமித் ஷாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்த போது பேசுகையில், "மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக நடந்த 30 தொகுதிகளுக்கான தேர்தலில் 26 இடங்களை வெல்வோம். அசாமில் 47 தொகுதிகளில் 37 தொகுதிகளைக் கைப்பற்றுவோம். எங்களுக்குக் களத்தில் இருந்து எங்கள் கட்சியினர் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இதைத் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார். சந்திப்பூர் தொகுதியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது, அமித் ஷாவின் பெயரைக் குறிப்பிடாமல் மம்தா பானர்ஜி பேசினார்.
அவர் கூறுகையில், ''பாஜகவைச் சேர்ந்த ஒரு தலைவர் மேற்கு வங்கத்தில் நடந்த முதல்கட்டத் தேர்தலில் 30 தொகுதிகளில் 26 தொகுதிகளில் வெல்வோம் எனத் தெரிவித்துள்ளார். ஏன் 30 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனக் கூறவில்லை. நான் கேட்கிறேன், மீதமுள்ள 4 தொகுதிகள் யாருக்காக, காங்கிரஸ், இடதுசாரிகளுக்காகவா?
தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணிக்கை தொடங்கட்டும். அப்போது மக்களின் முடிவு, தீர்ப்பு என்ன என்பது தெரியவரும். நான் எதையும் கணிக்க விரும்பவில்லை. 84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று மம்தா தெரிவித்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரீக் ஓ பிரையன் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "மோடி, அமித் ஷாவின் மனக்கணக்கு எல்லாம் உதவாது. உங்களின் கணிப்புகளை எல்லாம் குஜராத்தில் உள்ள ஜிம்கானாவில் வைத்துக்கொள்ளுங்கள். இது மேற்கு வங்கம்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT